Published : 05 Sep 2023 04:16 PM
Last Updated : 05 Sep 2023 04:16 PM
சென்னை: சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையம் சிறு மழைக்கே வெள்ளக்காடாகி நீச்சல் குளம்போல காட்சியளிக்கிறது. இதில் பேருந்துகள் நீந்தியபடியே வருகின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தென் சென்னை பகுதி மக்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும், மாமல்லபுரம் மற்றும் தாம்பரம் போன்ற புறநகர் பகுதிகளுக்கு செல்லவும் முக்கிய பேருந்து நிலையமாக திருவான்மியூர் பேருந்து நிலையம் விளங்குகிறது. தினமும் இப்பேருந்து நிலையத்தில் இருந்து பல 100 பேருந்து நடைகள் இயக்கப்படுகின்றன.
லட்சக்கணக்கான பயணிகள் இப்பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். சென்னையில் சிறு மழை பெய்தாலே, இப்பேருந்து நிலையம் வெள்ளக்காடாகி விடுகிறது. பேருந்துகள் அனைத்தும் அவற்றில் மிதந்தபடியே வந்து செல்கின்றன. இப்பேருந்து நிலையத்தில் சிக்கிக்கொள்ளும் பயணிகள் பேருந்துகள் மூலமாகவே வெள்ள நீரை கடந்து வெளியே வர வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதனால் இப்பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இப்பேருந்து நிலையம் நீச்சல் குளமாக காட்சியளிக்கிறது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் திருவான்மியூர் பகுதியை கவனிக்கும் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "திருவான்மியூர் பேருந்து நிலையம் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையை விட 2 அடி பள்ளத்தில் உள்ளது. இது மாநகர போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான இடம் என்பதால், பாரமரிப்பு பணிகளையும் அவர்களே மேற்கொண்டு வருகின்றனர்.
மழைநீர் தேங்கினால் எங்கள் தரப்பில் மோட்டார் போட்டு நீரை வெளியேற்றி வருகிறோம். பேருந்து நிலையத்தை உயர்த்தி அமைக்க பலமுறை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்திவிட்டோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT