தமிழகத்தின் மின்னுற்பத்தி 8.68 சதவீதம் அதிகரிப்பு - மத்திய மின்சார ஆணையம் தகவல்

தமிழகத்தின் மின்னுற்பத்தி 8.68 சதவீதம் அதிகரிப்பு - மத்திய மின்சார ஆணையம் தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தின் மொத்த மின்னுற்பத்தி 2021-22-ம் ஆண்டில், 8.68 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு நிறுவனமான மின்வாரியத்துக்கு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுக்கும் அனல், எரிவாயு, காற்றாலை, சூரியசக்தி மின்நிலையங்கள் உள்ளன. இவை தவிர, மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தேசிய அனல்மின் கழகம், இந்திய அணுமின் கழகம் ஆகியவற்றுக்கு தமிழகத்தில் அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் உள்ளன. மத்திய மின்சார ஆணையம் 2021-22-ம் ஆண்டுக்கான நாட்டின் மின்னுற்பத்தி புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

தமிழகத்துக்கு 5-வது இடம்: இதன்படி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு ஆகியவற்றை உள்ளடக்கிய தென்மாநிலங்களில் 33,712 கோடியூனிட் மின்னுற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2020-21-ல் 28,994 கோடி யூனிட்களாக இருந்தது. தமிழகத்தின் மொத்த மின்னுற்பத்தி 2021-22-ம் ஆண்டில் 5,691 கோடி யூனிட்களாக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 5,237 கோடி யூனிட்களாக இருந்தது. அதாவது, 8.68 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம், தமிழகம் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதே சமயம், கேரளா, தெலங்கானா, கர்நாடகாவில் மின்னுற்பத்தி இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது.

மேலும் கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி தமிழகத்தில் மொத்த மின் நிறுவு திறன் 34,706 மெகாவாட். இதில், தமிழக மின்வாரியத்துக்கு 4,320 மெகாவாட் திறனில் 5 அனல்மின் நிலையங்கள், 2,321 மெகாவாட் திறனில் 47 நீர்மின் நிலையங்கள், 516 மெகாவாட் திறனில் 4 எரிவாயு மின்நிலையங்கள் உள்ளன.

6,972 மெகாவாட் ஒதுக்கீடு: மத்திய மின் நிலையங்களில் இருந்து தமிழகத்துக்கு தினசரி6,972 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக 8 கோடி யூனிட்களும், நீர்மின் நிலையங்களில் ஒரு கோடி யூனிட்களும், எரிவாயு மின்நிலையங்களில் இருந்து 40 லட்சம் யூனிட்களும் மின்னுற்பத்தி செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in