

சென்னை: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 4 பேரை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாள்தோறும் நம் மாநிலம் கொலை கொள்ளை என கொலை மாநிலமாகவும், சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த தமிழகமாகவும், போதை பொருட்களின் தலைநகரமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டும். குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்து, கட்டுப்பாடற்ற மது விற்பனையை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு, பணம் சம்பாதிக்க இன்னும் எத்தனை பொதுமக்கள் உயிர் பலியாக வேண்டும். தினம் ஒரு கொலை தமிழகத்தில் நடந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கைகள் கட்டப்பட்டு இருக்கும் காவல்துறையை பணி செய்ய அனுமதித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: எல்லா குற்றங்களுக்கும் தாய் மது தான் என்பதை நன்றாக அறிந்த பிறகும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு மதுவை அனுமதிக்கப் போகிறோம். மதுவால் சமூகத்தில் ஏற்பட்ட சீரழிவுகளின் பட்டியல் தொடர்கிறது. மது சமூகத்தை சீரழிக்கிறது என்பதை அறிந்த பிறகும் அரசே மது வணிகத்தை தொடர்ந்து நடத்தும் கொடுமையை என்னவென்று சொல்வது. மது விலக்கே மக்களைக் காக்கும் என்பதை உணர்ந்து தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பதே காரணம். டாஸ்மாக் கடைகளை மூடாமல் குற்றங்கள் பெருகுவதற்கு காரணமாக இருக்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதேபோன்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், வி.கே.சசிகலா ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.