Published : 05 Sep 2023 06:05 AM
Last Updated : 05 Sep 2023 06:05 AM

சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதுக்கோட்டை இளைஞருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை

சென்னை: சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் புதுக்கோட்டை இளைஞருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் அஜித்குமார் (27). நிமோனியா உள்ளிட்ட பிரச்சினைகளால் இவரது நுரையீரல், இதயம் பாதிக்கப்பட்டிருந்தது. இதய மாற்று அறுவை சிகிச்சைமட்டுமே நிரந்தர தீர்வு என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார்.

இந்த சூழலில், சமீபத்தில் சாலை விபத்தில் படுகாயமடைந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 57 வயது நபர் ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவரதுஉறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். அவரதுஇதயத்தை அஜித்குமாருக்கு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

மூத்த இதய அறுவை சிகிச்சைநிபுணர் எஸ்.மனோகர் தலைமையில் மருத்துவர்கள் அபிநய வல்லவன், எழிலன், ராகேஷ், விவேகானந்தன், ரவி தேஜா, மயக்கவியல் மருத்துவர்கள் அசோக்குமார், கலைவாணி, மீனா ஆகியோர் கொண்ட குழுவினர் 3 மணி நேரம்அறுவை சிகிச்சை செய்து, இதயத்தை அஜித்குமாருக்கு வெற்றிகரமாக பொருத்தினர். பின்னர், அவரது நுரையீரல் பாதிப்பும் சரிசெய்யப்பட்டது.

இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மருத்துவமனைக்கு வந்து, அஜித்குமாரிடம் நலம் விசாரித்தார். மூத்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் மனோகர் தலைமையிலான மருத்துவ குழுவினரை பாராட்டினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: அஜித்குமாருடன் சேர்த்து இதுவரை 11 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. இந்த மருத்துவமனையில் கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு வரைதினசரி புறநோயாளிகள் எண்ணிக்கை 500-700 என்ற அளவில் இருந்தது. தற்போது 2,000 வரை உயர்ந்துள்ளது.

உள்நோயாளிகள் எண்ணிக்கை 250-ல் இருந்து 500 ஆக அதிகரித்துள்ளது. ஐசியூ படுக்கை வசதி 35-ல் இருந்து 135 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கருவுற்ற ஓரிரு வாரத்திலேயே சிசுவின் வளர்ச்சி குறித்து அறியும் கருவி, ரூ.34 கோடியில் ரோபோடிக்புற்றுநோய் உபகரணம் ஆகியவைஇங்கு உள்ளன. புற்றுநோயாளிகளுக்கு ரோபோடிக் கருவி மூலம்சிறிய அளவிலான 170 அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

உறுப்பு தான திட்டத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக மத்திய அரசிடம் இருந்து தமிழகம் விருது பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டும்தான் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் அரசு, தனியார் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.22 லட்சம் வரைவழங்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் 2014 முதல் இதுவரை 376நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குநர் சாந்திமலர், அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார், தமிழ்நாடு உறுப்பு மாற்றுஆணையத்தின் செயலர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பூரண குணமடைந்த அஜித்குமார் நேற்று வீடு திரும்பினார். அவரை மருத்துவர்கள், செவிலியர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ள இந்த இதய மாற்று அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்யரூ.30 லட்சத்துக்கு மேல் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x