

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தென்சென்னை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு அரசு துறைகளுடன் ஒருங்கிணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது.
அந்த வகையில், செப். 13-ம் தேதி திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்திலும், 14-ம் தேதி சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 20-ம் தேதி ஆலந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 21-ம் தேதி சோழிங்கநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியிலும் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறும்.
காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இம் மருத்துவ முகாம்களில் பல்வேறு அரசு துறைகளும் பங்கேற்பதால் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் மாற்றுத் திறனாளிகள் முகாம்களில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளாது.