குடிநீர் வாரிய பணிகளால் சகதிக்காடான மடிப்பாக்கம் சாலைகள்: பணிகளை உடனடியாக நிறுத்த மாநகராட்சி அறிவுறுத்தல்

குடிநீர் வாரிய பணிகளால் சகதிக்காடான மடிப்பாக்கம் சாலைகள்: பணிகளை உடனடியாக நிறுத்த மாநகராட்சி அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: சென்னை குடிநீர் வாரியப் பணிகளால் மடிப்பாக்கம் சாலைகள் சகதிக்காடாக மாறியுள்ள நிலையில், அப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மடிப்பாக்கம் பகுதி மழைக்காலங்களில் எளிதில் பாதிப்புக்குஉள்ளாகும் பகுதியாக இருந்து வருகிறது. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட இப்பகுதியில் தற்போதுமழைநீர் வடிகால் பணிகள் மற்றும்பாதாள சாக்கடை, குடிநீர் விநியோகக் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குடிநீர் வாரியப் பணிகள் காரணமாக பல சாலைகளில் பள்ளம் தோண்டி, மண் வெளியே கொட்டப்பட்டுள்ளது. அது சேறாக மாறியதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், பள்ளம் தோண்டி வெளியே கொட்டப்பட்ட மண், பலசாலைகளில் சகதிக்காடாக மாறியுள்ளது.

இதனால், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை இயக்க முடியாமலும், காலணி அணிந்துகொண்டு சாலையில் நடந்து செல்ல முடியாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்றுசில கனரக வாகனங்களும் சேற்றில்சிக்கி கவிழ்ந்துள்ளன.

இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அப்பகுதியில் நேற்று பார்வையிட்டு, குடிநீர் வாரியம் மேற்கொண்டு வரும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு 285 சாலைகளைத் தோண்ட மாநகராட்சியிடம் சென்னை குடிநீர் வாரியம் அனுமதி பெற்றுள்ளது. 205சாலைகளில் பணிகளை மேற்கொண்டது. மழைக் காலத்தில் இப்பணிகளால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவதால், சில தினங்களுக்கு முன்பு பணிகளை நிறுத்துமாறு அறிவுறுத்தி இருந்தோம்.

விடுபட்ட பகுதிகள் மற்றும் இணைப்பு மேற்கொள்ள வேண்டிய பகுதிகளில் மட்டும் பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரினர். அதுவும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததால், அனைத்துப் பணிகளையும் நிறுத்துமாறு அறிவுறுத்தி இருக்கிறோம். இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in