Published : 05 Sep 2023 07:00 AM
Last Updated : 05 Sep 2023 07:00 AM

‘ஸ்பா’வில் பெண்ணை மிரட்டிய பாஜக நிர்வாகிகள் 5 பேர் நீக்கம்: அண்ணாமலை நடவடிக்கை

சென்னை: ‘ஸ்பா’வில் பெண்ணிடம் பணம்பெற்றுக்கொண்டு மிரட்டியதாகவும், அங்குள்ள பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் எழுந்த புகாரின் பேரில் திருவள்ளூர் பாஜக நிர்வாகிகள் 5 பேரை கட்சியில் இருந்து அண்ணாமலை நீக்கி உள்ளார்.

சென்னையை அடுத்த மணலி புதுநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் அம்பத்தூரில் ‘ஸ்பா’ நடத்தி வருகிறார். அந்த ‘ஸ்பா’வுக்கு உரிமம்வாங்கித் தருவதாக பணம் வாங்கிக்கொண்டு அந்தப் பெண்ணை மிரட்டுவதாகவும், ‘ஸ்பாவில்’ பணிபுரியும் பெண்களிடம் தவறாகநடந்து கொண்டதாகவும் திருவள்ளூர் மாவட்ட மூத்த பாஜக நிர்வாகிகள் மீது புகார் எழுந்தது.

மேலும், இது தொடர்பான ஆடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தவிவகாரத்தில் 2 பேர் நிரந்தரமாகவும், 3 பேர் தற்காலிகமாகவும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து முழுமையாக அறிக்கை அளிக்கும் வரை கட்சியின் பொறுப்பில் இருந்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பி.பொன்பாஸ்கர், கே.எம்.ஆர்.முத்துராஜ் ஆகியோர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

மேலும், மாநில செயற்குழு உறுப்பினர் வி.சரவணன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சோமு.ராஜசேகர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். இவர்களிடம் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

இதேபோல், அண்ணாமலை வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், ‘திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்துக்கு புதிய மாவட்டத் தலைவர் நியமனம் செய்யப்படும் வரை தற்போது மாநில துணைத் தலைவராக செயல்பட்டு வரும் சக்கரவர்த்தி மாவட்ட அமைப்பாளராக நியமனம் செய்யப்படுகிறார். தற்போதுள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் அதே பொறுப்பில் தங்களது பணியைச் சிறப்பான முறையில் தொடரவேண்டும்’ என்றுகூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x