Published : 05 Sep 2023 06:35 AM
Last Updated : 05 Sep 2023 06:35 AM
மாம்பாக்கம்/பொன்னேரி: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ தெய்வநாயகி சமேத முருகநாதீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில்அமைந்துள்ள ஸ்ரீ தெய்வநாயகி சமேத முருகநாதீஸ்வரர் கோயில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. முதலாம் ராஜராஜ சோழர்காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளஇக்கோயிலில் பல ஆண்டுகாலமாக புனரமைப்பு பணி நடைபெறாமல் இருந்தது. கிராமமக்கள், கோயில் நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து இக்கோயிலில் புனரமைப்பு பணி மேற்கொண்டனர். குடமுழுக்கு செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன.
தற்போது மூன்று கால பூஜைகள் நிறைவுபெற்று, நேற்று நான்காம் கால பூஜை நிறைவடைந்து, இக்கோயிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. யாகசாலை பூஜை கலச நீர் எடுத்து வரப்பட்டு விமான கலசங்களில் ஊற்றி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது.
மாம்பாக்கம் மற்றும் பல்வேறுபகுதியில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.
பொன்னேரி அருகே உள்ள ஆரணி மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் நேற்று நடந்த மஹா கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT