

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் வானிலை கண்காணிப்பு வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்திய வானிலை ஆய்வு மையமும் சென்னை விஐடியும் இணைந்து, விஐடி பல்கலை. வளாகத்தில் தானியங்கி மழை அமைப்பு மற்றும் தானியங்கி வானிலை நிலையத்தை நிறுவியுள்ளன.
இந்த நிலையத்தை விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் நேற்று திறந்து வைத்தார். சென்னை விஐடி இணை துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், விஐடி வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாகராஜன், கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை டீன் இரா.கணேசன், ஜப்பான் நாட்டின் ரைகோகு பல்கலைக்கழக பேராசிரியர் மொரிகி ஒஹாரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இங்கு நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு நிலையம் வானிலை தகவல்கள் மற்றும் முன்னறிவிப்புகளை வழங்கும். காற்றின் வெப்பநிலை, ஈரப்பதம், வேகம், திசை மற்றும் அழுத்தம் ஆகியவற்றை அளவிடுவதற்குக் கருவிபொருத்தப்பட்டுள்ளது. மேலும் மழைப்பொழிவு அளவு மற்றும் தீவிரத்தை அளவிடுவதற்கான புதிய கருவிகள், சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்திய வானிலை மண்டல ஆய்வுமையத்தின் விஞ்ஞானி இ.என்.மீனாட்சிநாதன், சென்னை விஐடி கணினி மற்றும் பொறியியல் அறிவியல் துறைபேராசிரியர் இரா.பார்வதி, வெ.பட்டாபிராமன், அ.விஜயலட்சுமி ஆகியோர் கண்காணிப்பு வலையமைப்பை அமைப்பதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர்.வானிலை ஆராய்ச்சிக்கு இந்த புதிய முயற்சி பேருதவியாக இருக்கும் என்று மண்டல வானிலை மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்.