

சென்னை: காவிரி நீரை பெறும் விவகாரத்தில் தமிழக விவசாயிகள் நலன் மற்றும் மாநில உரிமை காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் குறுவை பயிரிடுவதற்கும், சம்பா பயிர்களுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்குவதற்கும் ஏதுவாக மேட்டூர் அணையில் இருந்துகடந்த ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்த ஆண்டில் ஜூன் 30 முதல் ஆக.28 வரை நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டங்கள், மற்றும் ஜூன் 17, ஆக.11, 29 ஆகிய நாட்களில் நடைபெற்ற காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களில் தமிழகத்தின் பங்கை கர்நாடகாகுறிப்பிட்ட அட்டவணைப்படி அளிக்கவலியுறுத்தப்பட்டது. இருப்பினும் கர்நாடக அரசு அட்டவணைப்படி நீரை அளிக்கவில்லை.
இந்நிலையில், ஆக.29-ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டத்தில் நீர் குறைக்கப்பட்டது குறித்தும், குறைபாடு நீர் 8.988 டிஎம்சியை குறைந்ததுவிநாடிக்கு 24 ஆயிரம் கனஅடி வீதம்,ஆக.28 முதல் 10 நாட்களுக்குகர்நாடகா பில்லி குண்டுலுவில் அளிக்க தமிழகம் வலியுறுத்தியது.
கடந்த ஆக.14-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அளித்த மனுவில் தமிழகத்துக்கு விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடிவீதம் ஆகஸ்ட் மாதம் அளிக்கவும்,அதன்பின் அட்டவணைப்படி அளிக்கவும் காவிரி மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி உச்ச நீதிமன்றத்தை வேண்டியது.
அதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ஆக.31-ம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், தமிழகத்துக்கு ஆக.27 வரை கிடைக்க வேண்டிய குறைபாட்டு நீரை பெற்றுத்தர, முறைப்படுத்தும் குழு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, வழங்க வேண்டிய நீரை விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியில் இருந்து 5 ஆயிரம் கனஅடியாக குறைத்தது ஆகியவை சரியில்லை என்றும், எதிர்காலத்தில் பில்லிகுண்டுலுவில் நீரை பெறுவதை உறுதிசெய்ய முறைப்படுத்தும் குழுவுக்கு அறிவுறுத்தும்படியும், அதன்மூலம் கர்நாடகாவுக்கு தகுந்தஆணையை பிறப்பிக்க வேண்டியும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தமிழகஅரசு கோரியதால் செப்.6-ம் தேதிவிசாரிக்க ஆணையிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் காக்கவும், தமிழக உரிமையை காக்கவும் தொடர் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
இவ்வாறு நீர்வளத் துறை செயலர் தெரிவித்துள்ளார்.