மாநிலங்களின் உரிமை பறிக்கப்படும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஆபத்தான முயற்சி: திருமாவளவன் கருத்து
சென்னை: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது மிகவும் ஆபத்தான முயற்சி. அதனால், மாநிலங்களின் உரிமை பறிக்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரியின் சமூகவியல் துறை சார்பில், ‘சாதி எதிர்ப்பில் தலித் அரசியல்’ எனும் தேசிய அளவிலான கருத்தரங்கம், கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செப்.18 முதல் 22-ம் தேதிவரை சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான நடைமுறைக்கு மாறானது.
இந்த கூட்டத்தொடரில், ‘ஒரே நாடு,ஒரே தேர்தல்’ என்கிற அடிப்படையில் சட்ட மசோதா கொண்டுவர இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. அது மிகவும் ஆபத்தான முயற்சி. அது சாத்தியமா, இல்லையா? என்பது இங்கு பிரச்சினை இல்லை. அது வேண்டுமா, வேண்டாமா என்பதுதான் பிரச்சினை.
இதனால், மாநிலங்களின் உரிமை பறிக்கப்படும். அதிபர் ஆட்சி முறைக்கு வழிவகுக்கும். எனவே அதை வேண்டாம் என்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
