

மதுரை: மதுரை அழகப்பன் நகரில் பாதாளசாக்கடை பணிக்காக கிணறு போல் பள்ளங்களைத் தோண்டி ஒரு மாதமாக மூடப்படாமல் உள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் ரூ.1,000 கோடி அளவுக்கு பாதாள சாக்கடை, பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நடக்கின்றன. இப்பணிகளை எடுத்த ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள் 100 வார்டுகளிலும் பள்ளங்களை தோண்டி பணிகளை முடிக்காமல் விட்டுள்ளனர். தற்போது மழை பெய்வதால் பள்ளங்கள் தோண்டப்பட்ட சாலை களை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.
ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்களிடம் போதிய தொழிலாளர்கள், வாகனங்கள் இல்லாததால் அவர்கள் ஒரே குழுவைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வாகனங்களை வைத்து அனைத்து இடங்களிலும் பணிகளை மேற் கொள்கின்றனர். குழாய்களைப் பதித்த சாலைகளில் பள்ளங்களை சரியாக மூடிச் செல்வதில்லை.
அதனால், வாகனங்களும் அடிக்கடி பள்ளங்களில் புதைந்து விடுகின்றன. மதுரை அழகப்பன் நகரில் பாதாள சாக்கடைப் பணிக்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கிணறு போல் தோண்டிய பள்ளத்தை தற்போது வரை மூடவில்லை. பாதாள சாக்கடை பராமரிப்புப் பணிகளையும் அந்த இடத்தில் முடிக்கவில்லை. மழை பெய்தால் தெப்பம்போல் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
டிவிஎஸ் நகர் சந்தானம் சாலையில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டிய போது குடிநீர் குழாய் உடைந்ததால் அந்தப் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழி யாகச் செல்லும் பொது மக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், முதியவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
கடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள், கடந்த ஒரு மாதமாக உள்ள இந்தப் பள்ளத்தைப் பற்றி பேசிய தோடு அப்பகுதியில் பாதாள சாக்கடை உடைப்பையும் தற்போது வரை சீரமைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர். அதற்கு மாநகராட்சி ஆணையர், மேயர், அப்பகுதியில் பணிகளைத் துரிதமாக முடுக்கிவிட்டு பாதாள சாக்கடை அடைப்பு சரி செய்யப்படும் என உறுதியளித்தனர்.
ஆனால், தற்போது வரை அப்பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு சீரமைக்கப்படவில்லை. வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் தினமும் கடந்து செல்ல முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.