Published : 05 Sep 2023 06:11 AM
Last Updated : 05 Sep 2023 06:11 AM
சென்னை: என்எல்சி சுரங்க தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை மிரட்டும் வகையில் சுற்றறிக்கை பிறப்பித்த மனித வள மேம்பாட்டு அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன், தலைமை நீதிப திக்குப் பரிந்துரைத்துள்ளார்.
நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் கடந்த 2020-ம்ஆண்டு ஜூலை 1-ம் தேதி 5-வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீ விபத்து நேரிட்டது. இதில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி என்எல்சி அதிகாரிகள் கோதண்டம், முத்துக்கண்ணு உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது என்எல்சி அதிகா ரிகளுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்து, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்திய நிலையில், குடும்பத்தினர் பலர்இன்னும் என்எல்சியில் பணிபுரிந்துவருவதால், ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து வழக்குத் தொடர்ந்தால், அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்எல்சி மனித வள மேம்பாட்டு அதிகாரிசுற்றறிக்கை பிறப்பித்துள்ளதா கவும், அதனால் மனரீதியாக பாதிப்படைந்துள்ளதால் இடையீட்டு மனு தாக்கல் செய்ய இயலவில்லை என்றும் தெரிவிக் கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கு விசாரணை அறிக்கையை போலீஸார் வரும் செப். 25-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். முன்ஜாமீன் கோரியுள்ள மனுதாரர்களில் சிலர் பணியில் உள்ளனர். சிலர் ஓய்வுபெற்று விட்டனர். எனவே, இந்த வழக்கில் போலீஸார் அறிக்கை தாக்கல் செய்யும் வரை மனுதாரர்களை கைது செய்யக் கூடாது.
இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்யுமாறு, உயிரி ழந்தவர்களின் குடும்பத்தினரை நீதிமன்றம் கடந்த ஆக. 17-ம் தேதி அறிவுறுத்திய நிலையில், அவர்களை மிரட்டும் வகையில், அன்று மாலையே என்எல்சி மனிதவள மேம்பாட்டு உதவிப் பொது மேலாளர் சுற்றறிக்கை பிறப்பித்து இருப்பது கண்டனத்துக்குரியது மட்டுமின்றி, நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் வகையில், தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்கிறேன். அத்துடன், இந்த சுற்றறிக்கையைப் பிறப்பித்த அந்த அதிகாரியின் பெயர் மற்றும் விவரங்களை, என்எல்சி நிர்வாகம் 3 நாட்களில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார். சுற்றறிக்கையைப் பிறப்பித்த அதிகாரியின் பெயர் விவரங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT