

சென்னை: மாநகர பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 629 வழித்தடங்களில் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு அம்சங்கள் அவ்வப்போது இடம்பெறுகின்றன. குறிப்பாக பெண்கள், மாற்றுத்
திறனாளிகள் போன்றோரின் நலன் கருதி ஜிபிஎஸ், கண்காணிப்பு கேமரா, அவசர அழைப்பு பட்டன், ஊன்றுகோல் வைப்பதற்கான வளையம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை முறையாக நடைமுறையில் உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்கப் படுவதில்லை என மாற்றுத்திறனாளிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக மாற்றுத்திறனாளி ஒருவர் கூறியதாவது: கோயம்பேடு- எம்கேபி நகர் இடையே செல்லும் 46ஜி வழித்தட எண் கொண்ட மாநகர பேருந்தில் மாற்றுத்திறனாளிகளின் ஊன்றுகோல் வைக்க இடம் அமைக்கப்பட்டுள்ளது. இது படிக்கட்டை ஒட்டி அமைந்துள்ள இருக்கையாகும்.
இந்த இருக்கைக்கும் படிக்கட்டும் நடுவே தடுப்பு இல்லாததால் பேருந்து செல்லும் வேகத்தில் ஊன்றுகோல் தவறி, படியில் ஏறுவோருக்கு இடையூறு ஏற்படும் வகையில் விழ வாய்ப்புள்ளது. இவ்வாறு ஊன்றுகோல் விழுந்தால் மேலே ஏறவோ அல்லது இறங்கவோ செய்யும் பயணிகளின் கால்களை இடைமறிக்கும்.
குழந்தைகளாக இருந்தால் கூடுதலாக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பயணிகள் கால் வைக்கும் இடத்தில் ஏதேனும் தடுப்புகள் இருந்தால், ஊன்று கோலால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. எங்களின் நலனுக்காக செய்யும் விஷயங்கள் பிறருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதைத் தடுக்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களை அனைத்து பேருந்துகளிலும் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு கூறினார்.