“கருத்தியல், கோட்பாடு குறித்து பேசுவது இந்துக்களுக்கு எதிராக திரிக்கப்படுகிறது” - திருமாவளவன்

திருமாவளவன் | கோப்புப்படம்
திருமாவளவன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "சனாதனத்தை ஒழிப்பது என்பது ஒரு கருத்தியலை, ஒரு கோட்பாட்டை எதிர்த்து பேசுகின்ற ஒன்றாகும். அது ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் எதிரானது என்பது போன்றதொரு திரிபுவாதத்தை, பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்களே பேசுவது வியப்பாக இருக்கிறது" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அண்மையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் நானும் கலந்துகொண்டு உரையாற்றினேன். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியும் பங்கேற்று உரையாற்றினார். சனாதனத்தை ஒழிப்பது இன்றியமையாத தேவை. எப்படி தொற்று நோய்களை நாம் ஒழித்தாக வேண்டுமோ? அப்படி இதையும் ஒழித்தாக வேண்டும் என்று அவர் பேசியதை இன்று அகில இந்திய அளவிலான ஒரு பிரச்சினையாக, உள்துறை அமைச்சரான அமித் ஷா போன்றவர்களே பேசும் நிலை உருவாகியிருக்கிறது. இது அதிர்ச்சியளிக்கிறது.

சனாதனத்தை ஒழிப்பது என்பது ஒரு கருத்தியலை, ஒரு கோட்பாட்டை எதிர்த்து பேசுகின்ற ஒன்றாகும். அது ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் எதிரானது என்பது போன்றதொரு திரிபுவாதத்தை, பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்களே பேசுவது, வியப்பாக இருக்கிறது. சனாதனம் சமத்துவத்துக்கு எதிரானது என்பதால்தான், அது விமர்சனத்துக்கு உள்ளாகிறது என்பதை அமைச்சர்களே இன்னும் புரிந்துகொள்ளாமல் தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக விமர்சனம் செய்வது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இந்தப் போக்கை விசிக கண்டிக்கிறது" என்று அவர் கூறினார்.

முன்னதாக, சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லியில் வழக்கறிஞர் ஒருவர் போலீஸில் புகார் தெரிவித்திருந்தார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் தான் சனாதானக் கொள்கையை அழிக்க வேண்டும் என்றே பேசியதாகவும் ஆனால், அதனை பாஜக திரித்து போலியான செய்திகளைப் பரப்புவதாகவும் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். | விரிவாக வாசிக்க > பாஜக எனது கருத்தைத் திரித்து போலி செய்தியைப் பரப்புகிறது - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in