

வாணியம்பாடி: வாணியம்பாடி மளிகை கடை வியாபாரி பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தார். அவருக்கு கல்லீரல் செயலிழப்பு மற்றும் நிமோனியா பாதிப்பு இருந்ததாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் நேற்று காலை உயிரிழந்தார். அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததாக ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து, அவரது உடல் வாணியம்பாடிக்கு பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்ட நிலையில் மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் நியூடவுன் மயானத்தில் சுமார் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு எப்படி வந்தது என்பது குறித்து தெரியவில்லை.
ரவிக்குமார் உயிரிழந்த நிலையில் நியூடவுன் பகுதி முழுவதும் வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் விரைவில் மருத்துவ முகாம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணிராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
இறந்த ரவிக்குமாருக்கு கல்லீரல் செயலிழந்துள்ளது. சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் கடந்த 31-ம் தேதி எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எச்1 என்1 வைரஸ்: அவருக்கு நிமோனியா பாதிப்பும் இருந்தது. எனவே, வைரஸ் பாதிப்புகள் தொடர்பாக சளி மாதிரிகளை ஆய்வு செய்தபோது எச்1 என்1 வைரஸ் பாதிப்பு இருந்தது. நிமோனியா வந்தால் மற்ற வைரஸ் பாதிப்புகள் சுலபமாக வரும். கல்லீரல் செயலிழப்பு, நிமோனியா பாதிப்பால் அவர் உயிரிழந்தார் என்றார்.