

சென்னை: சிங்கப்பூரில் நடைபெற்ற 6-வது இன்டா ஆசிய-பசிபிக் வழக்கு வாதப் போட்டியில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சாஸ்த்ரா சட்டக் கல்லூரி தங்கப்பதக்கம் வென்றது.
இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலை. வெளியிட்ட செய்திக்குறிப்பு:
6-வது இன்டா ஆசிய-பசிபிக் வழக்கு வாதப் போட்டி 2023 சிங்கப்பூரில் நடைபெற்றது. வர்த்தக முத்திரை மற்றும் நியாயமற்ற போட்டி சட்டத்தில் எழும் முக்கியமான பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த வழக்கு வாதப் போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்றன.
இதில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்யன் ஆத்ரேயா, சுவாமிநாதன் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தை வெற்றி கொண்டனர். மேலும் போட்டியின் ஆரம்ப சுற்றுகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக 2-வது சிறந்த அணியாகவும் தேர்வு செய்யப்பட்டனர். சாஸ்த்ரா அணி தொடக்கச் சுற்றுகளில் பஞ்சாப் பல்கலை. அணி, பாகிஸ்தானின் ஜீலம் வளாக அணி, சிங்கப்பூர் தேசிய பல்கலை. அணி ஆகியவற்றை வாதத்தால் வீழ்த்தியது.
சாஸ்த்ரா அணிக்கு 1,500 அமெரிக்க டாலர் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. வழக்கு வாதப் போட்டியின் சிறந்த பேச்சாளராக ஆர்யன் ஆத்ரேயா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 500 அமெரிக்க டாலர் பரிசு கிடைத்தது.
வெற்றி பெற்ற மாணவர்களை சாஸ்த்ரா பல்கலை. நிர்வாகம் பாராட்டி, ஒரு லட்சம் ரூபாய் ஊக்கப் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த போட்டியில் சாஸ்த்ரா சட்டக் கல்லூரி வெற்றி பெறுவது இது 2-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.