Published : 04 Sep 2023 06:14 AM
Last Updated : 04 Sep 2023 06:14 AM

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை கவரும் ரயில் பெட்டி உணவகம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள ரயில் பெட்டி உணவகம். படங்கள்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிஉணவகம் பயணிகளை வெகுவாககவர்ந்து வருகிறது. இந்த உணவகத்தில் தென் இந்திய சைவ உணவுகள் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தாமல், வருவாய் ஈட்ட ரயில்வே நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில், பழையரயில் பெட்டிகளை உணவகமாக மாற்றி, ரயில் நிலையத்தில் உணவகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை சென்ட்ரல், பெரம்பூர், பொத்தேரி, காட்டாங்குளத்தூர் ஆகிய 4 ரயில் நிலையங்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கமுடிவு செய்யப்பட்டது. அதன்படி,சென்னை சென்ட்ரல், பெரம்பூர்,பொத்தேரி ஆகிய 3 ரயில் நிலையங்களில் ரயில் பெட்டி உணவகம்அமைக்க தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, கடந்த மார்ச்சில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரீமியம் பார்க்கிங் பகுதியில் ரயில் பெட்டி உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: பழைய ரயில் பெட்டிக்கு வண்ணம் தீட்டி, உள் பகுதியில் வடிவமைத்து உணவகமாக மாற்றியுள்ளனர். இந்த உணவகம் குளிர்சாதன வசதி கொண்டது.

நட்சத்திர ஓட்டல் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள
உணவகத்தின் உட்பகுதி

24 மணி நேரமும் செயல்படும்: இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 45 வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட முடியும். உள்பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள வடிவமைப்பு, மகிழ்ச்சியாக சாப்பிடும் சூழலைப் பயணிகளுக்கு ஏற்படுத்தும். ரயிலில் பயணிகளுக்குத் தரமான சாப்பாடு வழங்குவது முக்கிய குறிக்கோள் ஆகும். இந்த உணவகத்தில் தென் இந்திய சைவ உணவு கிடைக்கும். ரூ.25 முதல் ரூ.100 வரையிலான விலையில் பல உணவு வகைகள் கிடைக்கும். இந்த உணவகம் 24 மணி நேரமும் செயல்படும்.

ஒப்பந்தத்தின்படி, 2 ஆண்டுகள் வரை இந்த உணவகம் செயல்படும். ஆண்டுக்கு ரூ.95 லட்சம் வீதம் 2 ஆண்டுக்கு. ரூ.1 கோடியே 90 லட்சம் உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியின் உள்பக்கத்தில் உணவுகள் தயாரிக்க அனுமதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x