

சென்னை: சனாதன ஒழிப்பு என்ற பெயரில் நடத்தப்பட்ட மாநாட்டில் கலந்துகொண்ட அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு முதல்வருக்கு ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சனாதன இந்து தர்மத்தை பாதுகாக்கவும், போற்றவும் ஏற்பட்டதுதான் கோயில்கள். அவற்றை பராமரிக்க ஏற்படுத்தப்பட்டதுதான் இந்து சமய அறநிலையத் துறை. ஆனால், சனாதன ஒழிப்பு என்றபெயரில் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு, அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த செயல்பாடு, அவர் சார்ந்துள்ள துறைக்குஎதிரானது. ‘பாரபட்சம் இல்லாமல் செயல்படுவேன்’ என்று அமைச்சராக அவர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது.
திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்தே, கோயில் வழிபாடுகளில் தலையிட்டு சீரழித்த பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தங்க நகைகளை ரகசியமாக உருக்கி, வங்கிகளில் இருப்பு வைப்பது தொடர்பான முழு தகவலையும் அரசு இதுவரை வெளியிடவில்லை.
இந்த நிலையில், சனாதன இந்துசமயத்தை ஒழிப்பதாக கூறிக்கொண்டு நடத்தப்பட்ட மாநாட்டில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவே கலந்து கொண்டிருக்கிறார். எனவே, அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்கதமிழக முதல்வருக்கு ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும். மேலும், அமைச்சர் சேகர்பாபுவை தகுதி நீக்கம் செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்ட ரீதியிலான நடவடிக்கையை இந்து முன்னணி மேற்கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.