கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி மாநகராட்சி ஆணையர் கண்காணிப்பு: சென்னை, புறநகரில் கொட்டி தீர்த்த மழை

சென்னையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலை நேரத்தில் பெய்த மழை குளிர்வித்தது. சேப்பாக்கம், வாலாஜா சாலையில் பெய்த மழையில் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்ற வாகனங்கள். படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலை நேரத்தில் பெய்த மழை குளிர்வித்தது. சேப்பாக்கம், வாலாஜா சாலையில் பெய்த மழையில் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்ற வாகனங்கள். படம்: எஸ்.சத்தியசீலன்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் நேற்று மாலை பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாநகர் முழுவதும் நேற்று இரவு குளிர்ந்த சூழல் நிலவியது. பூந்தமல்லியில் 11 செ.மீ. மழை பெய்ததால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.

தென்மேற்கு பருவமழைக் காலத்தில் வட மாநிலங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா பகுதிகளில் தற்போது மழை இல்லாத நிலையில் வடதமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னை, புறநகரில் நேற்று முன்தினம் மழை பெய்து பூந்தமல்லி போன்ற பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.

சென்னையில் நேற்று பிற்பகலுக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. பின்னர், சாரல் மழை தொடங்கிய நிலையில், படிப்படியாக பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் பரவலாக கனமழையாக கொட்டி தீர்த்தது.

குறிப்பாக சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், அடையார், கிண்டி, சைதாப்பேட்டை, ராயபுரம், பெரம்பூர், மாதவரம், புரசைவாக்கம், வேப்பேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், அரும்பாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சாலைகளில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தவாறு சென்றன. இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு வந்த பொதுமக்கள், மழையில் நனைந்து சிரமத்துக்குள்ளாயினர்.

சென்னையில் பெய்து வரும் மழை நிலவரம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணித்தார். மாநகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்குகிறதா என ஆய்வு செய்தார். மேலும் சாலையில் மழைநீர் தேங்கும் இடங்களை கண்காணித்து, அவற்றை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

பூந்தமல்லி பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக 11 செமீ மழை பதிவாகி இருந்தது. இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை கொட்டியது.

இதேபோல், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in