Published : 04 Sep 2023 07:00 AM
Last Updated : 04 Sep 2023 07:00 AM

அண்ணா சாலை போக்குவரத்தில் குழப்பம்: வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் போக்குவரத்து போலீஸார்

சென்னை வாலாஜா சாலையில் இருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அண்ணா சிலை அருகே திரும்பிச் செல்லும் இடத்தில் நிலவும் வாகன நெரிசல். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திண்டாடிவருகின்றனர். மேலும், போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டு வரும் மாற்றங்களால், மிகுந்தசிரமத்துக்கு உள்ளாவதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அண்ணா சாலையில் அண்ணா சிலை அருகேகடந்த 2022 பிப். மாதம் முதல்போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, அண்ணா சாலைமேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் வெலிங்டன் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, டேம்ஸ் சாலை வழியாகச் சென்று வலதுபுறம் திரும்பி, பிளாக்கர்ஸ் சாலை வழியாக அண்ணா சாலையை சென்றடைய வழிவகை செய்யப்பட்டது.

இதேபோல, வாலாஜா சாலையில் இருந்து அண்ணா சாலை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் இடதுபுறம் திரும்பி, அண்ணா சாலை பாட்டா பாயிண்டில் இலகுரக, இருசக்கர வாகனங்கள் மற்றும் மாநகரப் பேருந்துகள் ‘யூ’ வளைவு எடுத்துச் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. அதேபோல, மேலும் பல மாற்றங்களும் செய்யப்பட்டன.

இந்த போக்குவரத்து மாற்றத்தால் இப்பகுதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் குழப்பத்தில் இருப்பதுடன், விபத்து அச்சத்திலேயே வாகனங்களை ஓட்டிச் செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 25-ம் தேதி போக்குவரத்து போலீஸார் ஓர் அறிவிப்பை வெளியிட்டனர்.

அதில், அண்ணா சாலை- ஜி.பி. சாலையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க,ஆக. 27-ம் தேதி முதல் அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்தனர்.

அதன்படி, வெஸ்ட் காட் சாலையில் இருந்து வரும் மாநகர அரசுப் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் ஜி.பி.சாலை வழியாக அண்ணா சாலைக்கு செல்ல தடை செய்யப்பட்டது.

இந்தவாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே திருப்பி விடப்பட்டு, வைட்ஸ் ரோடு மற்றும் ஸ்மித் சாலை வழியாக அண்ணா சாலையைச் சென்றடைய வழிவகை செய்யப்பட்டது. இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் வழக்கம்போல ஜி.பி.சாலை வழியாக அண்ணாசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

ஏற்ெகனவே அந்தப் பகுதிகளில் அதிக நெரிசல் இருந்த நிலையில், புதிய அறிவிப்பால் வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல முடியவில்லை. குறிப்பாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மறுநாளே அந்தப் போக்குவரத்து மாற்றத்தை போக்குவரத்து போலீஸார் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

இதேபோல, வாகன ஓட்டிகளை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகஅண்ணா சாலையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போக்குவரத்து மாற்றங்களை திரும்பப் பெற்றுக் கொண்டு, அப்பகுதிகளில் முன்பு இருந்ததுபோல போக்குவரத்து விதிகளை அமல்படுத்த வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும். மேலும், வல்லுநர் குழுக்களை அமைத்து, போக்குவரத்துப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து இருசக்கர வாகன ஓட்டி குமரேசன் கூறும்போது, "வாலாஜாசாலையில் இருந்து அண்ணா சாலை வழியாக பாரிமுனை செல்ல வேண் டும் என்றால், வாகன ஓட்டிகள் வாலஜாசாலை-அண்ணா சிலை அருகில் இடதுபுறம் சுமார் 50 மீட்டர் முன்னேறி, மீண்டும் யூ வளைவில் வலதுபுறம் திரும்பி நேராக பாரிமுனை நோக்கி செல்ல வேண்டும்.

நேராகச் செல்பவர்கள் அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லலாம். இதில் உள்ள யூ வளைவு மிகவும் அபாயகரமாக உள்ளது. பெண்கள், வயதானவர்கள் வாகனம் ஓட்டும்போது பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, அண்ணா சாலையில் 2022-க்குப் பிறகு செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றங்களை திரும்பப் பெற்றுக் கொண்டு,பழைய நிலையையே தொடர அனுமதிக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து போக்குவரத்து காவல் அதிகாரிகளிடம் கேட்டபோது, "ஜி.பி.சாலையின் இருபுறமும் அனைத்து வகையான வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலையில் இருபுறமும் நான்கு சக்கர வாகனங்களின் உதிரி பாகம் கடைகள்அமைந்துள்ளதால், தினமும் ஏராளமானோர் இங்கு வருகின்றனர்.

இதனால், அதிக அளவு நெரிசல் ஏற்பட்டது. எனவேதான், அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அது எதிர்பார்த்த பலன் தராததால், போக்குவரத்து மாற்றத்தை அடுத்தநாளே திரும்ப பெற்றுக் கொண்டோம். அண்ணா சாலையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள், அவற்றின் தாக்கங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x