Published : 04 Sep 2023 04:06 AM
Last Updated : 04 Sep 2023 04:06 AM
புதுச்சேரி: புதுச்சேரி முழுவதும் அடுத்தவாரம் முதல் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட உள்ளது. விதிமீறினால் பைக்குகள், கார்களுக்கு ஆயிரம் ரூபாயும், வணிக வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரமும், ரேசில் ஈடுபடும் இளைஞர்களுக்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
புதுச்சேரி பொது நிர்வாகத்துறையின் மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 112-ன் கீழ் அதிகபட்ச வேக வரம்புகளை நிர்ணயிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. அதன்படி அடுத்தவாரம் முதல் புதுச்சேரி, காரைக்கால் உட்பட அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள அனைத்து சாலைகளில் வேகக் கட்டுப்பாடு கொண்டு வரப்படுகிறது. வாகனங்களின் வேகத்தை கண்டறிய ‘ஸ்பீடு கன்' சாதனம் வந்துள்ளது.
புதுச்சேரியை பொருத்தவரை குபேர் அவென்யூ பகுதியில் (கடற்கரை சாலை பழைய வடிசாராய ஆலையில் இருந்து பார்க் விருந்தினர் மாளிகை சந்திப்பு வரை) 20 கி.மீ வேகத்திலும், சர்தார் வல்லபபாய் பட்டேல் சாலை, சுப்பையா சாலை, கடற்கரை சாலை மற்றும் அண்ணாசாலை (வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு) ஆகிய பகுதிகளில் 30 கி.மீ வேகத்திலும், கடலூர் சாலை வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கத்தில் இருந்து அரியாங்குப்பம் பாலம் வரை 30 கி.மீ வேகத்திலும்,
அரியாங்குப்பம் பாலத்தில் இருந்து முள்ளோடை எல்லை வரை 50 கி.மீ வேகத்திலும், அரியாங்குப்பம் பாலத்தில் இருந்து முள்ளோடை எல்லை வரை (கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு பகுதி, தொழில்துறை பகுதி, சந்தை இடங்கள் மற்றும் மருத்துவமனைகள்) அருகில் 30 கி.மீ வேகத்திலும் செல்ல வேண்டும்.
விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கடற்கரை சாலை முதல் வில்லியனூரில் ஆரியபாளையம் பாலம் வரை 30 கி.மீ வேகத்திலும், ஆரியபாளையம் பாலத்தில் இருந்து மதகடிப்பட்டு வரை 50 கி.மீ வேகத்திலும், ஆரியபாளையம் பாலத்தில் இருந்து மதகடிப் பட்டு (கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு பகுதி, தொழில்துறை பகுதி, சந்தை இடங்கள் மற்றும் மருத்துவமனை) அருகில் 30 கி.மீ வேகத்திலும் செல்ல வேண்டும்.
காமராஜர் சாலை (முழுவதும்) முதல் கோரிமேடு எல்லை வரை 30 கி.மீ வேகத்திலும், வழுதாவூர் சாலை ராஜீவ் காந்தி சதுக்கத்தில் இருந்து குருமாம்பேட் பாண்லே வரை 30 கி.மீ வேகத்திலும், எம்.ஜி ரோடு, சுப்பையா சாலை சந்திப்பில் இருந்து முத்தியால்பேட்டை மார்க்கெட் வரை 30 கி.மீ வேகத்திலும்,
மரப்பாலம் சந்திப்பில் இருந்து முத்தியால்பேட்டை மார்க்கெட் வரை 30 கி.மீ வேகத்திலும் முத்தியால்பேட்டை மார்க்கெட் முதல் கனகசெட்டிகுளம் எல்லை வரை ( திறந்த சாலை ) 50 கி.மீ வேகத்திலும், முத்தியால்பேட்டை மார்க்கெட்டிலிருந்து கனகசெட்டிகுளம் எல்லை வரை (கல்வி நிறுவனம், குடியிருப்பு பகுதி, தொழில்துறை பகுதி, சந்தை, மருத்துவமனைகள்) 30 கி.மீ வேகத்திலும் அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் மாறன் கூறுகையில், “விதிகளை மீறி வேகமாக செல்லும் வாகனங்களில் ‘ஸ்பீடு கன்' மூலம் வேகத்தை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படும். இரண்டு மற்றும் நான்குசக்கர வாகனங்களுக்கு ரூ.1,000, வணிக வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் ரேசில் ஈடுபடும் இளைஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
இது அடுத்தவாரம் அமலாகும். மேலும் புதுச்சேரிக்கு 2, காரைக்கால், ஏனாமுக்கு தலா ஒன்று என மொத்தம் 4 ஸ்பீடு கன் வாங்கப்படவுள்ளது” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT