Published : 04 Sep 2023 04:08 AM
Last Updated : 04 Sep 2023 04:08 AM

சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை நவம்பரில் தொடங்க வாய்ப்பு

சென்னை: சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை வரும் நவம்பரில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை ஐ.சி.எஃப்-ல் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகின்றன. இங்கு இதுவரை 33 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 26-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன.

தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் - மைசூர், சென்னை சென்ட்ரல் - கோவை, காசர்கோடு - திருவனந்தபுரம் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த 3 வந்தே பாரத் ரயில்களுக்கும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை - திருப்பதி, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், 31, 32, 33-வது வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில், 31-வது வந்தே பாரத் ரயில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆரஞ்சு, சாம்பல் நிறம் கொண்ட இந்த ரயில் சமீபத்தில் தான் சோதனை ஓட்டம் நடத்தப் பட்டிருந்தது. இந்த ரயில் மங்களூரு - பாலக்காடு அல்லது சென்னை- மங்களூரு இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை நவம்பரில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் - கூடூர்,சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், ஜோலார்பேட்டை வழித் தடத்தில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன.

இதேபோல, தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் பாதைகளின் மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன. சென்னை - விழுப்புரம் வழித்தடத்தில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்படுகிறது. இந்தபாதை மேம்படுத்தப்படுகிறது. வந்தே பாரத் ரயில் குறைந்தபட்சம் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட வேண்டும்.

எனவே, குறிப்பிட்ட வழித் தடத்தில் வேகத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இப்பணி விரைவில் முடிந்துவிடும். இந்த பணி முடிந்த பிறகு, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படும். இந்த ரயில் சேவை வரும் நவம்பரில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக, இறுதி முடிவை ரயில்வே வாரியம் எடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x