Published : 04 Sep 2023 04:08 AM
Last Updated : 04 Sep 2023 04:08 AM
திருவாரூர்: மேட்டூர் அணையில் இருந்து செயல்படுத்தப்படும் சரபங்கா திட்டத்துக்கு கடந்த அதிமுக ஆட்சியின் போது எதிர்ப்பு தெரிவித்து விட்டு, தற்போது அந்த திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் துணை போவதற்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேட்டூர் அணையிலிருந்து, சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி, மேச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி பெறுவதற்காக சரபங்கா திட்டம் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின்படி, மேட்டூர் அணையில் 16 கண் மதகுக்கு மேல் பகுதியில், இடது கரையை உடைத்து தண்ணீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஒட்டுமொத்தமாக காவிரி டெல்டா பேரழிவை சந்திக்கும் என்பதால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தோம்.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், முன்னாள் எம்.பி ஏகேஎஸ்.விஜயன் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெறாமல், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக இந்தத் திட்டத்தை செயல்படுத்த முனைவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆணையத்திலும் புகார் அளித்துள்ளோம்.
இதனிடையே, இத்திட்டத்தின் முதல்கட்டமாக மேச்சேரி வழியாக தண்ணீரைக் கொண்டு செல்வதற்கான குழாய் வழிப்பாதை அமைக்கும் பணி 2022-ல் ரூ.562 கோடி மதிப்பில் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், 2-வது நீர்வழிப் பாதையாக நங்கவள்ளி வழியாக கொண்டு செல்வதற்கு கூடுதலாக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்து, நிலங்களை கையகப் படுத்துவதற்கான அரசாணைகளை ஆக.27-ம் தேதி திமுக அரசு வெளியிட்டுள்ளது.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சியாக இருந்தபோது இத்திட்டத்துக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள திமுக அரசு, முதல்கட்ட பணியை விரைவு படுத்தி முடிப்பதற்கு துணை போனதுடன், தற்போது 2-வது கட்ட பணிக்கும் அரசாணைகளை பிறப்பித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
டெல்டாக் காரராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் முதல்வரே இத்திட்டத்துக்கு துணை போவதையும், நிதி ஒதுக்கீடு செய்வதையும் டெல்டா விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள். 16 கண் மதகுக்கு கீழே வெளியேறும் தண்ணீரைத் தடுத்து, பாசனத்துக்கு தண்ணீரைக் கொண்டு செல்வதே உண்மையான உபரிநீர் திட்டம்.
இதை முதல்வர் உணர்ந்து, தற்போதுள்ள திட்டத்துக்கான அரசாணைகள் முழுவதையும் ரத்து செய்து, இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT