Published : 03 Sep 2023 07:23 PM
Last Updated : 03 Sep 2023 07:23 PM
மதுரை: முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் 70% நிறைவடைந்துள்ளதாக மதுரை மேயர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி ஒட்டுமொத்தமாக குடிநீர் தேவைக்கு வைகை அணையை மட்டுமே நம்பியிருக்கிறது. அணையில் தண்ணீர் குறைந்தால் மதுரை மக்களுடைய குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் மாநகராட்சிக்கு நெருக்கடி ஏற்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக கோடைக்கால மழையும், பருவமழையும் ஓரளவு பெய்து விட்டதால் குடிநீர் பற்றாக்குறை வெளியே தெரியவில்லை. இதே நிலை எப்போதும் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. அதனால், கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை நிரந்தரமாக போக்குவதற்கு ரூ.1,653.21 கோடியில் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஆரம்பத்தில் இந்த திட்டத்தை 2021ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கீடு, டெண்டர் விடுவதில் தாமதம், கரோனா தாக்கம் போன்றவற்றால் இந்த திட்டம் தாமதமாகவே தொடங்கியது. தற்போது திமுக ஆட்சியில் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் டிசம்பரில் முடித்து மதுரை மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு திட்டமிட்பட்டது. ஆனால், தற்போது 70 சதவீதம் பணிகளே முடிந்துள்ளதால் மதுரை மக்களுக்கு டிசம்பரில் பெரியாறு குடிநீர் கிடைக்க வாய்ப்பில்லை என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
தற்போது பகுதி-1, பகுதி-2 திட்டப்பணிகளில் 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன. பகுதி-3 ல் 60 சதவீதம் பணிகளே முடிந்துள்ளன. பகுதி-1ல் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையம் வரை குழாய் பதிக்கும் பணியில் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தனியார் ஆக்கிரமிப்பை அகற்றுவது, வனத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றின் ஒப்புதல் கிடைப்பது போன்றவற்றில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், கடந்த வாரம் முல்லைப்பெரியாறு குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்து விரைவுப்படுத்துவும், அங்குள்ள சிக்கல்களை ஆராய்ந்து முடிவெடுக்கவும் மேயர் இந்திராணி அதிகாரிகள் குழுவுடன் தேனி மாவட்டம் சென்றுள்ளார்.
இந்த சிக்கலைளை தீர்க்கவும், தேனி மாவட்டத்தில் இந்த குடிநீர் திட்டங்களுக்கு அரசு துறைகளின் ஒப்புதல் பெறவும் விரைவான நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து அவர் முறையிட்டுள்ளார். மாநகராட்சி மேயர் தரப்பில் கேட்டபோது, ''ஒட்டுமொத்தமாக 70 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. டிசம்பரில் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து மதுரை பை-பாஸ் ரோடு வரை குழாய் பதித்து பணிகள் நிறைவேற்றப்படும். அதன்பின் நகர்பகுதியில் குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் பணிகள்தான் பாக்கியிருக்கும். அதை முடித்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெள்ளோட்டம் பார்த்து, இந்த திட்டம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்படும்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT