Published : 03 Sep 2023 03:43 PM
Last Updated : 03 Sep 2023 03:43 PM
சென்னை: "தமிழகத்தில் மிக விரைவில், 100 தொகுதிகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு பயனாளிகளை பதிவு செய்யும் 100 சிறப்பு முகாம்கள் ஒரே நாளில் நடத்தப்படும்" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் மூன்று இடங்களில் நடத்தப்பட்டது. இந்த முகாமினை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கடந்த ஆட்சியில் மருத்துவ காப்பீட்டுக்கான பிரிமியம் தொகை ஒரு வருடத்துக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.699 ஆக இருந்தது, இந்த ஆட்சியில் ரூ.849 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த ஆட்சி காலத்தில் காப்புறுதித் தொகை ஒவ்வொரு வருடத்துக்கும் ரூ.2 லட்சமாக இருந்தது, தற்போதைய ஆட்சியில் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. கடந்த ஆட்சிக்காலத்தில் சிகிச்சை முறைகள் 1450 ஆக இருந்தது, தற்போதைய ஆட்சியில் 1513 ஆக உயர்த்தப்பட்டது.
கடந்த ஆட்சியில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் எண்ணிக்கை 970, தற்போதைய ஆட்சியில் 1829 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் பிரத்யேக சிகிச்சை முறைகளின் எண்ணிக்கை 2, தற்போதைய ஆட்சிக் காலத்தில் 8 ஆக உயர்ந்துள்ளது. அந்த வகையில் காப்பீட்டு திட்டம் என்பது பெரிய அளவில் பயன்பாட்டில் இருக்கின்றது. அதேபோல் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பெரிய அளவில் இன்னொரு சிறப்பான திட்டமும் உள்ளது. இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48 திட்டத்தின் படி, 2021 டிசம்பர் 18 ஆம் தேதி தமிழக முதல்வரால், மேல்மருவத்தூர் மருத்துவ கல்லூரியில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உடனடியாக அவர்களை காக்கும் பொருட்டு, முதல் 48 மணி நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் தரும் வகையில் அந்தத் திட்டம் அப்போது தொடங்கி வைக்கப்பட்டது. அத்திட்டத்தின் மூலம் இதுவரை பயன்பெற்றுள்ள பயனாளிகளின் எண்ணிக்கை 1,81,860 பேர், இதன் மூலம் அரசின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் செலவழிக்கப்பட்டுள்ள தொகை ரூ.159.48 கோடி ஆகும். இதில் அரசு மருத்துவமனைகளில் 237களிலும், தனியார் மருத்துவமனைகள் 455களிலும் ஒட்டு மொத்தமாக 692 மருத்துவமனைகளில் இத்திட்டம் பயன்பாட்டில் இருக்கின்றது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினை பொறுத்தவரை இந்தியாவுக்கே வழிகாட்டும் அமைப்பாக தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் யாரும் விடுபட்டு போகக்கூடாது என்கின்ற வகையில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, இந்த சிறப்பு முகாம்கள் இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. மிக விரைவில் தமிழகத்தில் 100 தொகுதிகளில் 100 சிறப்பு முகாம்கள் ஒரே நாளில் நடத்தப்படும்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT