Published : 03 Sep 2023 08:00 AM
Last Updated : 03 Sep 2023 08:00 AM
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும்வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத் துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.
அதிகபட்சமாக 16 செ.மீ மழை: செப். 2-ம் தேதி (நேற்று) காலை8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 16 செ.மீ., தேனி மாவட்டம் வைகை அணை, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சியில் தலா 15 செ.மீ., திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 11 செ.மீ., தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 10செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை, தேனி மாவட்டம் மஞ்சளாறு ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வரும் 6-ம் தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT