Published : 03 Sep 2023 04:00 AM
Last Updated : 03 Sep 2023 04:00 AM
ராமநாதபுரம்: நாட்டிலேயே முதல்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்நோக்கு கடற்பாசி பூங்காவுக்கு மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகேயுள்ள வளமாவூரில், மீன்வளத் துறை சார்பில் ரூ.127.71 கோடி மதிப்பில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. மத்தியஇணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலை வகித்தார்.
தமிழக மீன்வளத் துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி வரவேற்றுப் பேசும்போது, “மத்திய அரசு ரூ.78.77 கோடி, தமிழக அரசு ரூ.48.94 கோடி பங்களிப்புடன் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 15 ஆயிரம் டன் கடற்பாசி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பூங்கா அமைந்த பின்னர் 49 ஆயிரம் டன் கடற்பாசி உற்பத்தி செய்யப்படும்” என்றார்.
மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால் வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா அடிக்கல்நாட்டிப் பேசியதாவது: நாட்டிலேயே முதல்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில்தான் கடற்பாசி பூங்கா அமைக்கப்படுகிறது. பிரதமர் மோடி தொலை நோக்குப் பார்வையுடன், மீனவப் பெண்களுக்காக இந்த கடற்பாசிப் பூங்காவை நிறுவியுள்ளார்.
ரூ.127.71 கோடியில் அமையும் இந்தப் பூங்கா மூலம், 6 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், மீனவப் பெண்கள் பயனடைவர். இந்தப் பூங்கா கட்டுமானப் பணிகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளைப் போல, மீனவர்களுக்கும் கிஷான் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 374 பேருக்கு இந்த அட்டைகள் வழங்கப்பட்டு, ரூ.4.71 கோடி நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா அமைக்கப்பட்டதும் மீனவர்களுக்கு கடற்பாசி விதை வழங்குதல், பயிற்சி அளித்தல், சந்தைப் படுத்தல் போன்ற பணிகள் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மத்திய முன்னாள்அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், மத்திய மீன்வளத் துறை இணைச் செயலர் நீத்து பிரசாத், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன், உதவி ஆட்சியர்(பயிற்சி) சிவானந்தம், பாஜக மாவட்டத் தலைவர் தரணி முருகேசன், மண்டலப் பொறுப்பாளர் முரளிதரன் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தை மத்திய அமைச்சர்கள் பர்ஷோத்தம் ரூபாலா. எல்.முருகன் பார்வையிட்டு, மீனவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT