

புதுச்சேரி: பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 'முதல்வரின் பெண் குழந்தைகளுக்கான பொருளாதார ஆதரவு மற்றும் அதிகாரம் அளித்தல் திட்டம்' என்ற திட்டத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவித்தார்.
அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக கடந்த மார்ச் 17-ம் தேதியன்றும், அதற்குப் பிறகும் பிறந்த 38 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.19 லட்சம், பெண் குழந்தையின் பெயரில் சுகன்யா சம்ரிதி ( செல்வமகள் ) திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு, வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர்ரங்கசாமி, பயனாளிகளுக்கு வங்கிக் கணக்குப் புத்தகத்தை வழங்கினார். இதே போல, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 21 முதல் 55 வயதுக்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.
முதல் கட்டமாக தட்டாஞ்சாவடி, மங்கலம் தொகுதிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தட்டாஞ்சாவடி தொகுதியில் 300 பேருக்கும், மங்கலம் தொகுதியில் 1,300 பேருக்கும் அடையாள அட்டைகளை முதல்வர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.