

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகேயுள்ள நவமால் மருதூர் கிராமத்தில், கடந்த 27- ம் தேதி கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 6 குழந்தைகள், 8 பெண்கள் உட்பட 20 பேர் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பத்தைச் சேர்ந்த சுப்பையா மனைவி சியாமளா (44) என்பவர் நேற்று மாலை உயிரிழந்தார். நவமால் மருதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்த போது, கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் ஆட்சியர் பழனி ஆகியோர் நேற்று அரசு மருத்துவனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
ரூ.2 லட்சம் நிவாரணம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சியாமளாவின் கணவர், குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.