Published : 07 Dec 2017 09:27 AM
Last Updated : 07 Dec 2017 09:27 AM

வேட்புமனு நிராகரிப்பு குறித்து ஆளுநரிடம் முறையிடுவேன்: தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த பின் நடிகர் விஷால் தகவல்

ஆர்.கே.நகரில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநரிடம் முறையிடப் போவதாக நடிகர் விஷால் தெரிவித்தார். தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் மனுவும் அளித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சில ஆதாரங்களை விஷால் அளித்ததைத் தொடர்ந்து அவரது மனு ஏற்கப்பட்டது. ஆனால், இரவு 11 மணிக்கு மீண்டும் மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

விஷாலை முன்மொழிந்த அத்தொகுதியைச் சேர்ந்த 10 பேரில், 2 பேர் கையெழுத்து தங்களுடையதல்ல என தெரிவித்ததால் மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை விஷால் சந்தித்து புகார் அளித்தார்.

அப்போது ராஜேஷ் லக்கானியிடம், ‘‘என்னுடன் வேட்புமனு அளித்த பல வேட்பாளர்களின் மனுக்களில் உள்ள முன்மொழிபவர்கள் பெயர்கள் குறித்து எவ்வித விசாரணையும் நடத்தப்படாத நிலையில், என் மனுவில் கையெழுத்திட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளார்’’ என்று புகார் தெரிவித்தார். புகார் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் விஷால் கூறியதாவது: எனது வேட்பு மனு முதலில் நிராகரிக்கப்பட்டு அதன்பின் ஏற்கப்பட்டு, மீண்டும் நிராகரிக்கப்பட்டது குறித்து தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட்டேன். நடந்த விஷயங்களை புகாராக தெரிவித்துள்ளேன். தமிழக ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க அனுமதி கேட்கப் போகிறேன். அரசு தரப்பில் பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும். அதில், தேர்தல் நடத்தும் அதிகாரி விஷாலின் மனு ஏற்கப்பட்டதாக கூறி, அவருக்கு எல்லோரும் கை குலுக்கி வெளியேறிய காட்சிகள் உள்ளன. 2 பேரின் கையெழுத்து சரியில்லை என்று கூறியபின், அந்த 2 கையெழுத்தையும் ஆய்வு செய்து அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதில் சர்ச்சை இருந்தால் வேட்பாளருக்கு 24 மணி நேரம் அவகாசம் அளிக்க வேண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்தி எனது வேட்பு மனுவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரதமருக்கு ட்விட்டர்

இதுதொடர்பாக ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு விஷால் பதிவிட்டதில், ‘சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணியில் என்ன நடந்தது என்பது தங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். எனது வேட்புமனு ஏற்கப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டது. இது முற்றிலும் நேர்மையற்றது. இதை நான் தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். நீதி வெல்லும் என்று நம்புகிறேன்’ என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x