Published : 02 Sep 2023 07:33 AM
Last Updated : 02 Sep 2023 07:33 AM
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செப்.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான விழா ஏற்பாடுகளை அமைச்சர் மற்றும் ஆட்சியர் ஆய்வு செய்தனர்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதன் அடிப்படையில் குடும்ப பெண்களுக்கு ரூ.1000உரிமைத் தொகை வழங்கும்திட்டம், வரும் செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் தொடங்கப்படுகிறது.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில், காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் விழா நடைபெறும் இடத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
விண்ணப்ப பரிசீலனை தீவிரம்: இத்திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ய, இதற்காக கடந்தஜூலை இறுதியில் இருந்து அக்.16-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டன. இடையே, தகுதிகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு, முதியோர் உதவித்தொகை பெறும் குடும்பங்கள், மாற்றுத்தினாளிகள் உதவித்தொகை பெறும் குடும்பங்களில் உள்ள பெண்களிடமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதையடுத்து, விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் அனைத்தும் அரசிடம் உள்ள வருமான வரித்துறை, மின்துறை, போக்குவரத்துத் துறை உள் ளிட்ட பல்வேறு துறைகளின் தரவுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. இதில், சந்தேகம் ஏற்படும் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி: செப்.15-ம் தேதி திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், 10-ம்தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘விண்ணப்ப பரிசீலனை, சந்தேகத்துக்குரிய வீடுகளில் கள ஆய்வு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிந்ததும், தகுதியான பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT