Published : 02 Sep 2023 07:54 AM
Last Updated : 02 Sep 2023 07:54 AM
கோவை: இந்திய ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு (சிட்டி), தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சைமா) உள்ளிட்ட அமைப்புகள், தமிழக அரசுடன் இணைந்து கோவையில் நடத்திய 11-வது ஆசிய ஜவுளிக் கருத்தரங்கு, தொழில்முனைவோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக ‘சிட்டி’ அமைப்பு தலைவர் டி.ராஜ்குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் ‘இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது: கோவையில் 11-வது ஆசிய ஜவுளிக் கருத்தரங்கு சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஸ் கோயல், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
பல்வேறு ஜவுளித் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது பாராட்டுக்குரியது என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பாராட்டினார்.
மேலும், கடந்த 2 ஆண்டுகளாக ரஷ்யா-உக்ரைன் போர், உலகளாவிய பொருளாதார மந்தநிலை, கரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டபோதும், இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 776 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. (நேற்று முன்தினம் `இந்து தமிழ்திசை' நாளிதழில் வெளியிடப்பட்டிருந்த கருத்தரங்கு தொடக்க விழா செய்தியில், ஜவுளி ஏற்றுமதி 776பில்லியன் டாலர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஒட்டுமொத்த ஏற்றுமதி என்று வெளியாகியிருக்க வேண்டும்).
அதாவது 55 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்றும் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஸ் கோயல் பெருமிதம் தெரிவித்தார். கோவையில் கடந்த 2 நாட்கள் நடத்தப்பட்ட 11-வது ஆசிய ஜவுளிக் கருத்தரங்கில், 6 நாடுகளை சேர்ந்த 45 பேர் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஜவுளித் தொழில் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் வேளாண்மை மற்றும் நிதித் துறை அமைச்சருடன் கலந்துபேசி, நீண்டஇழை பருத்திக்காவது 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க முயற்சி மேற்கொள்வதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் உறுதி அளித்துள்ளார்.
தற்போது ஜவுளித் தொழிலில் மந்தமான சூழல் காணப்பட்டாலும், விரைவில் நிலைமை மாறும். ஏற்கெனவே ‘ஹோம் டெக்ஸ்டைல்ஸ்’ என்று சொல்லக்கூடிய படுக்கை விரிப்புகள், துண்டு, கிச்சன் பயன்பாட்டு ஜவுளிப் பொருட்களுக்கான பணி ஆணைகள் வெளிநாடுகளில் இருந்து வரத்தொடங்கியுள்ளன. வரும் நாட்களில் பின்னலாடைகளுக்கும் பணிஆணைகள் வரத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ஜவுளித் தொழில்முனைவோருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக, ஆசிய ஜவுளிக் கருத்தரங்கு அமைந்தது. இவ்வாறு ராஜ்குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT