Published : 02 Sep 2023 07:00 AM
Last Updated : 02 Sep 2023 07:00 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள சிவானந்த குருகுலத்தில் மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, புதிய பாரதத்தை மாணவர்கள் படைக்க வேண்டும் என்றார்.
என் மண், என் தேசம் என்ற நடைபயணம் மேற்கொண்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரை அடுத்த நின்னக்கரையை சேர்ந்த மறைந்த சுதந்திர போராட்ட தியாகி நடேசன் இல்லத்துக்கு வந்தார். அங்கு தியாகியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் டெல்லியில் அமைக்கப்பட உள்ள பாரதமாதா சிலைக்கு மறைந்த தியாகி நடேசன் வசித்த இல்லத்திலிருந்து மண் எடுத்துச் சென்றார். இதையடுத்து, காட்டாங்கொளத்தூரில் உள்ள சிவானந்தா குருகுலம் உண்டு உறைவிட பள்ளிக்கு சென்ற அண்ணாமலை குழந்தைகளிடம் கலந்துரையாடினார்.
பின்னர் அவர் பேசியதாவது: நமது நாட்டில் அனைத்து வசதிகளும் உள்ளன. சூரிய சக்தி, காற்று, பணம், மனிதர்கள் என அனைத்தும் உள்ளது. ஆனால், அன்பு மற்றும் சற்று குறைவாக உள்ளது. சக மனிதர்கள் மீது அன்பு செலுத்துதல், சக மனிதர்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தி பார்க்காமல் அனைவரையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும். கருப்பு, சிவப்பு, வெள்ளை என பார்க்காமல் அனைவரையும் மனிதனாக பார்க்க வேண்டும்.
கடந்த1918-ம் ஆண்டு பாரதியார் ஒரு நாள் நிலவுக்கு செல்ல வேண்டும் என கவிதை எழுதினார். நூற்றாண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு சந்திரயான்- 3 சென்றுள்ளது. சூரியனை கண்ணால் மட்டும் பார்க்க முடியும். சூரியன் பக்கத்தில் யாரும் போக வேண்டும் என நினைக்க முடியாது.
இன்றைக்கு 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சூரியனுக்கு, இந்தியா செயற்கைக்கோள் அனுப்புகிறது. இதுபோன்று, இந்தியா முழுவதும் மிகப்பெரிய மாற்றங்களை வழங்கக்கூடிய புதிய பாரதத்தை மாணவர்களாகிய நீங்கள் தான் படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT