நான் அரசியல்வாதி இல்லை; மக்கள் பிரதிநிதி: விஷால் பேட்டி

நான் அரசியல்வாதி இல்லை; மக்கள் பிரதிநிதி: விஷால் பேட்டி
Updated on
2 min read

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் நான் அரசியலாவதி இல்லை. நான் மக்கள் பிரதிநிதியாகவே தேர்தலில் போட்டியிடுகிறேன் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று (திங்கள்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நடிகர் விஷால், காலை 9 மணியளவில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் அமைந்துள்ள ராமபுரம் தோட்டத்துக்குச் சென்றார். அங்கு, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விஷால், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் நான் அரசியலாவதி இல்லை. இந்தத் தேர்தலை நான் அரசியல்வாதியாக பார்க்கவில்லை. நான் மக்கள் பிரதிநிதியாகவே தேர்தலில் போட்டியிடுகிறேன். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக போட்டியிடவில்லை. மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவே தேர்தலில் போட்டியிடுகிறேன். என்னைப் பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை.

ஆர்.கே.நகர் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளே பூர்த்தி ஆகாமல் இருக்கிறது. அவர்கள், சில விஷயங்களை சொல்ல விரும்புகின்றனர். அந்த விஷயங்களை எங்கே, யாரிடம் சொல்ல வேண்டும்.. எங்கு சொன்னால் வேலை நடக்கும், சொல்லியும் ஏன் வேலை நடக்கவில்லை என்ற கேள்விகள் அம்மக்களுக்கு இருக்கின்றன. இவற்றிற்கான பதில் தேடும் முயற்சியாகவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்" என்றார்.

வாக்குகளைப் பிர்ப்பதற்காக போட்டியிடவில்லை:

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதால் யாருடைய வாக்குகளையும் நான் பிரிக்க முற்படவில்லை. எனது குறிக்கோள், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே. ஆர்.கே.நகர் மக்கள் ஒன்றும் சிங்கப்பூர் மக்களைப் போல், அமெரிக்க மக்களைப் போல் வாழ வேண்டும் என நினைக்கவில்லை. அடிப்படைத் தேவைகள்கூட பூர்த்தியாகமல் இருக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் மக்கள் இந்தநிலையில் இருப்பது வேதனை. இவற்றிற்கு விடை காணவே போட்டியிடுகிறேன்.

தேர்தலில் போட்டியிட அனைவருக்குமே ஜனநாயக உரிமை இருக்கிறது. இத்தேர்தலில் களம் காணும் அனைவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்ததாக அவர் அங்கிருந்து சிவாஜி மணி மண்டபத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, காமராஜர் சிலைக்கும் அவர் மரியாதை செலுத்தினார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஷால்:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக நடிகர் விஷால், சனிக்கிழமை இரவு அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு, தமிழக அரசியலிலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஷால் அரசியலுக்கு வருவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஷால் இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in