Published : 11 Dec 2017 10:59 AM
Last Updated : 11 Dec 2017 10:59 AM

உணவு வணிகர்கள் உரிமம் பெற நாளை சிறப்பு முகாம்

உணவு வணிகர்கள் எளிதில் உரிமம் பெற ஏதுவாக சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் திருவல்லிக் கேணியில் நாளை (டிசம்பர் 12-ம் தேதி) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி உணவு வணிகம் செய்வோர் உரிமம், பதிவு சான்றிதழ் பெறுவது கட்டாயம் ஆகும். எனவே, சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் உணவு வணிகம் புரிவோருக்கு உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் வழங்க, வரும் 12-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

திருவல்லிக்கேணி ராமுண்ணி ஈசுவரன் மாளிகையில் (ராகவேந்திரா கல்யாண மண்டபம் அருகில்) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும். முகாமில் ஓட்டல் உரிமையாளர்கள், இறைச்சி விற்பனையாளர்கள், சாலையோர உணவுக் கடைகள், பழக்கடைகள், டீக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரிமம் பெறலாம்.

இதுதொடர்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு குறைவாக வணிகம் செய்யும் உணவு வணிகர்கள் பதிவுச்சான்று பெற ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் வணிகம் செய்யும் உணவு வணிகர்கள், உரிமம் பெற ரூ.2,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தக் கட்டணம் ஓராண்டுக்கு செல்லுபடியாகும். உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமத்தை 5 ஆண்டுகள் வரை அதற்குரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9940358471, 9444909695 என்ற செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x