Published : 20 Dec 2017 12:04 PM
Last Updated : 20 Dec 2017 12:04 PM

ஜெ. சிகிச்சை வீடியோ: அரசியல் தலைவர்கள் சரமாரி கேள்வி

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் வெளியிட்டார். 20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்தபடி பழச்சாறு அருந்துவது போல் காட்சிகள் உள்ளன.

'வீடியோவின் டைமிங் முக்கியம்..!- தமிழிசை'

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் நடைபெறும் நிலையில் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டது ஏன்? என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘‘இந்த வீடியோ காட்சியை ஒரு மருத்துவர் என்ற முறையிலும், அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையிலும் கவனிக்கிறேன். ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் உலா வந்தன. அப்போதெல்லாம் இதனை வெளியிடவில்லை. இவ்வளவு நாள் கழித்து இதனை ஏன் வெளியிடுகிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இது, பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது முக்கியமல்ல. அதேசமயம் தேர்தல் சமயத்தில் இதை வெளியிடுவது ஏன் என்பதுதான் கேள்வி’’ எனக்கூறியுள்ளார்.

வீடியோவின் உறுதித்தன்மை என்ன?- தொல் திருமாவளவன்

"இந்த வீடியோவை பார்க்கும் போது, ஜெயலலிதா சிகிச்சையின் போது, ஒரளவு உடல்நலத்துடன் இருந்துள்ளார் என்பது தெரிகிறது. இது எப்போது எடுக்கப்பட்டது, அதன் உறுதித்தன்மையை பற்றி தெரியவில்லை. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோதே மிகவும் உடல்நலம் குன்றிய நிலையில் வந்தார் என, அந்த மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. எனவே இதையும் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

எனினும் தேர்தல் சமயத்தில் இதை வெளியிடுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வில்லை என, ஓபிஎஸ் - இபிஎஸ் அணியினர் கூறி வரும் நிலையில், அதை மறுப்பதற்காக இதை வெளியிட்டுள்ளனர். தேர்தல் சமயத்தில் இதை வெளியிடுவது மக்கள் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்" என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

இது தேர்தலுக்காக..

இதுபற்றி அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி, "ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து நாங்கள் எழுப்பியது இரண்டு கேள்வி தான். அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் எந்தநிலையில் கொண்டு வரப்பட்டார். அவருக்கு உயர்ந்த சிகிச்சை கொடுத்து அவரை காப்பாற்றி இருக்கலாம் என்ற இரண்டு தான் எங்கள் கேள்வி. அதற்கு இந்த வீடியோவில் எந்த பதிலும் இல்லை. தேர்தலுக்காக இதை அவர்கள் வெளியிட்டுள்ளனர்" எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x