

திருப்பூர்: திருப்பூரில் பருவமழை பொய்த்ததால் வறட்சி மாவட்டமாக திருப்பூரை அறிவிக்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்று விவசாயிகள் பேசியதாவது:
காளிமுத்து: பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் பலர், கடனை செலுத்த முடியாமல் தவித்து வந்தனர். பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பின், 40 சதவீத தள்ளுபடியுடன் கடன் தொகையை செலுத்தினோம். தற்போது அந்த நடைமுறை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு ஏற்கெனவே வழங்கப்பட்ட சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
மனோகரன்: கொப்பரை விலைகுறைந்துள்ளது. விவசாயிகளின் பட்டா, சிட்டாக்களை பெற்று ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொப்பரையை வியாபாரிகள் இருப்பு வைக்கின்றனர். இதனை தடுக்க வேண்டும்.
மவுன குருசாமி: தென்னை விவசாயிகளுக்கு உயிர் உரம் வழங்க வேண்டும். வடகிழக்கு, தென் மேற்குப் பருவமழை திருப்பூர் மாவட்டத்தில் பொய்த்து விட்டதால், வறட்சி மாவட்டமாக அறிவிக்க, தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்.
சின்னசாமி: குன்னத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரையை கொள்முதல் செய்யநடவடிக்கை எடுக்க வேண்டும். ஊத்துக்குளி பகுதியில் நிலக்கடலை பயிரிட்டிருந்த விவசாயிகள் களைக்கொல்லியை வாங்கி பயன்படுத்தினர்.
ஆனால் அது ஒரு சதவீதம்கூட பயன் தரவில்லை. சம்பந்தப்பட்ட களைக்கொல்லியை விவசாயிகளுக்கு விற்று மோசடி செய்த தனியார் உரக்கடை மற்றும் நிறுவனத்தின் மீது மாவட்ட ஆட்சியர்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.குமார்: போதிய பருவமழை இல்லாததால், ஊராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்தினால், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதுடன், விவசாயிகளும் பயன்பெறுவர். அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டால் அழைப்பை அவர்கள் ஏற்பதில்லை. இவ்வாறாக விவசாயிகள் பேசினர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் பேசும்போது, “மாவட்ட நிர்வாகம் என்பது அதிகாரிகள் மட்டுமில்லை. பொது மக்கள், விவசாயிகள் என அனைவரும் இணைந்ததுதான். ஒரு நல்ல நிர்வாகம் என்பது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியது. விவசாயிகள் செல்போனில் தொடர்பு கொண்டால்,
அழைப்பை ஏற்று, களத்தில் உள்ள நிலவரங்களையும் விவரமாக தெரிவியுங்கள். செல்போனில் பேசுவதை விவசாயிகள் பதிவு செய்கிறார்கள் என்பதற்காக அலுவலர்கள் பேசாமல் இருக்க வேண்டாம். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றும்போது, பிரச்சினைகள் தீரும்” என்றார்.