

செங்கல்பட்டு: காலாவதியான பரனூர் சுங்கச்சாவடியை உடனடியாக மூட வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளின் கூட்டு குழு சார்பில் செங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு நகருக்கு அருகில் அமைந்துள்ள பரனூர் சுங்கச் சாவடி பலவகையில் சட்டவிரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்லும் இந்த சுங்கச் சாவடியின் அனுமதி 2019-ம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. தொழுப்பேடு சுங்கச் சாவடியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு குறைவானதாகவே பரனூர் சுங்கச் சாவடி அமைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் விதிமுறைக்கு மாறாக செயல்படும் சுங்கச் சாவடிகளை நீக்கக் கோரி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் பரனூர் சுங்கச்சாவடியும் ஒன்று. இவற்றுக்கெல்லாம் மேலாக மத்திய தணிக்கை அறிக்கையில் பரனூர் சுங்கச் சாவடி மூலம் சட்டத்தை மீறி கூடுதலாக ரூ. 28 கோடி வசூலிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது. மேற்கண்ட வகையில் பல்வேறு சட்ட விதி மீறல்களுடன் செயல்பட்டு வரும் பரனூர் சுங்கச் சாவடியால் தினசரிபல ஆயிரக்கணக்கான வாகன பயனாளிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பண இழப்புக்கு உள்ளாகும் நிலை தொடர்கிறது.
எனவே, பரனூர் சுங்க சாவடியை அகற்றவும், அதன் சட்டவிரோத கொள்ளையை தடுத்து நிறுத்தவும், தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட ஆட்சி நிர்வாகம், நேரடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளின் கூட்டுக் குழு சார்பில் நேற்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.ச.பாரதி அண்ணா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆறுமுகநயினார், இந்திய கம்யூனி்ஸ்ட் மாநில குழுஉறுப்பினர் மேகநாதன், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இரணியப்பன், பாட்டாளி வர்க்க சமரன் அணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.