

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அமைப்பு ரீதியான மாவட்டங்கள் மறுவரையறை செய்யப்பட்டு, 144 மாவட்டங்களுக்கான செயலாளர்கள் மற்றும் 21 மண்டலச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்தப் பட்டியலை ஜூலை 26-ம் தேதி கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.
இந்நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாக நாளை (செப்.2) திருமாவளவன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதுதொடர்பாக 15 மாவட்ட பொறுப்பாளர்களுக்கு விசிக தலைமையகம் அனுப்பியசுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணி கலந்தாய்வுக் கூட்டம் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் செப். 2-ம் தேதி (நாளை) சென்னையில் நடைபெறுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 15 மாவட்டங்களைச் சார்ந்த மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.