Published : 01 Sep 2023 06:12 AM
Last Updated : 01 Sep 2023 06:12 AM
சென்னை: தமிழக வணிகவரித்துறையில் 1000 பேருக்கு துணை மாநில வரி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், புதிய கோட்டங்களில் பணியமர்த்தப்பட்டோருக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழக வணிகவரித்துறையில், உதவியாளர்களுக்கு பல ஆண்டுகளாக பதவி உயர்வு அளிக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பாக அரசுக்கு அவர்கள் கோரிக்கைகள் விடுத்து வந்தனர்.
இதையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவையில், 1000 உதவியாளர்களுக்கு துணை மாநில வரி அலுவலர்கள் பதவிஉயர்வு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பையடுத்து, இந்தாண்டு 1000 பேரில்160 பேருக்கு மாநில வரி அலுவலர்கள், 840 பேருக்கு துணை மாநில வரி அலுவலர்களாக பதவிஉயர்வு அளிக்கப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் பணி வழங்கும் வகையில், 13 புதிய வணிகவரிக் கோட்டங்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் பணியமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில் பதவி உயர்வு கிடைத்த போதிலும், புதிய வணிகவரிக் கோட்டங்களில் பணியமர்த்தப்பட்ட மாநில வரி அலுவலர்கள், துணை மாநில வரி அலுவலர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வேதனையடைந்துள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கூறும்போது, ‘‘நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு வந்துவிட்டது. ஆனால் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. ஒரு மாதம் என்றால் சமாளிக்கலாம். அடுத்தடுத்த மாதங்களில் வங்கிக்கடன் மற்றும் குடும்பசெலவுகளுக்காக சிரமம் ஏற்படுகிறது. எனவே, விரைவாக இப்பிரச்சினையை சரி செய்து சம்பளத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து வணிகவரித்துறை அதி்காரிகளிடம் கேட்டபோது, ‘‘புதிதாக 13 கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், உதவி ஆணையர் மற்றும் அவர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு சம்பளத்தில் பிரச்சினை இல்லை. பதவி உயர்வுபெற்ற 1000 பேரில்தற்போது வரை 750 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். சம்பளத்தைபொறுத்தவரை ஐஎப்எச்ஆர்எம்எஸ் அன்ற இணையதளம் வழியாக வழங்கப்படுகிறது.
பதவி உயர்வு பெற்றவர்களுக்கான சம்பளத்தை பொறுத்தவரை நிதித்துறையில் ஒப்புதல் பெற்று, இந்த இணையதளத்தில் பதிவேற்றி, அதற்கான ‘கோடு’ பெறவேண்டும். அதைக் கொண்டே கருவூலத்தில் சம்பளம் பெறமுடியும். இதற்கான பணிகள் தற்போது 70 சதவீதம் முடிந்துள்ளன. செப்டம்பர் முதல் வாரத்தில் முழுமையாகமுடிக்கப்பட்டுவிடும். அதன்பின் சம்பளப் பிரச்சினை இருக்காது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT