Published : 01 Sep 2023 05:47 AM
Last Updated : 01 Sep 2023 05:47 AM
சென்னை: தெலங்கானா முதல்வரின் செயலர் ஸ்மிதா சபர்வால், பழங்குடியினர் நலத்துறை செயலர் கிறிஸ்டினா சொங்து, கல்வித் துறை செயலர் கருணா வக்காட்டி, முதல்வரின் சிறப்புப் பணி அலுவலர் பிரியங்கா வர்கீஸ், மாற்றுத் திறனாளிகள் துறை சிறப்புச் செயலர் பாரதி ஹொல்லிக்கேரி ஆகிய 5 அதிகாரிகள் நேற்று தமிழகம் வந்தனர்.
அவர்கள் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை நேற்று காலை ஆய்வு செய்தனர். முதலில் சென்னை ராயபுரம், எஸ்.என்.செட்டி தெரு, ஜிசிசி பழைய பள்ளிக் கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள சமையல் அறைகளைப் பார்வையிட்டனர். அங்கு உணவு தயாரிக்கப்படும் முறை குறித்து பல்வேறு விதமான தகவல்களைக் கேட்டனர்.
அவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் க.இளம் பகவத் விளக்கம் அளித்தார். மேலும், சில உணவு வகைகளைச் சாப்பிட்டு அதன் சுவை குறித்தும் ஆய்வு செய்தனர். அப்போது தமிழக சமூக நலத்துறை கூடுதல் இயக்குநர் கார்த்திகா உடனிருந்தார்.
மாநகராட்சி பள்ளியில்... அதைத் தொடர்ந்து ராயபுரம் ஆர்த்தூன் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி உருது தொடக்கப் பள்ளிக்குச் சென்றுஅங்கு காலை உணவு விநியோகிக்கப்படும் விதத்தை பார்வையிட்டு உணவின் தரம் குறித்து மாணவர்களிடமும் கேட்டறிந்தனர்.
இதுகுறித்து காலை உணவுத் திட்ட சிறப்பு அலுவலர் இளம்பகவத் நிருபர்களிடம் கூறும்போது, ``தெலங்கானாவில் இருந்து வந்த அரசு அதிகாரிகள் நமது காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளைப் பார்வையிட்டனர்.
உணவு தயாரிப்பு, அதன் தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து கிராமப் பகுதிகளிலும் இந்த திட்டம் எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்ய உள்ளனர். தமிழகத்தில் காலை உணவுத் திட்டம் நன்றாகவே செயல்பட்டு வருகிறது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT