

சென்னை: குழந்தைகளுக்கான தடுப்பூசி சான்றிதழை டிஜிட்டல் முறையில் வழங்கும் தகவல் பதிவை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய அரசுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம்பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ஃப்ளூயன்சா தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை, ரூபெல்லாநோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின் ஏ குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 10 லட்சம் கர்ப்பிணிகள், 9.4 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 11 ஆயிரம் இடங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அந்த விவரம் பிக்மி என்ற அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
பயனாளிகளுக்கு தடுப்பூசி தவணைக்கென தனியாக புத்தகம் அல்லது அட்டைகள் அச்சிடப்பட்டு, அதில் கைகளால் எழுதிக் கொடுக்கும் முறையே இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மத்திய அரசின் ‘யூ-வின்’ செயலியின் மூலமாக தடுப்பூசி சான்றிதழை டிஜிட்டல் முறையில் வழங்கும் திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தகவல்களை இணையத்தில் பதிவேற்ற தமிழகத்தில் செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், "யூ-வின் செயலி என்றால் எங்களுக்கு என்னவென்று தெரியாது, மிகவும் சிக்கலான அந்தப் பணியை எங்கள் மீது திணிப்பது என்ன நியாயம். எங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. இதனால், தாய்சேய் நலப்பணி முற்றிலும் பாதிக்கப்படுகிறது" என்று கூறி, கிராமசுகாதார செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பிக்மி மற்றும்யூ-வின் ஆகிய இணையதளங்களுக்கு இடையே ஒரு தொடர்பு கட்டமைப்பை (லிங்க்) வழங்குமாறு மத்திய சுகாதாரத் துறை கூடுதல் ஆணையர் வீனா தவனுக்கு, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் எழுதியுள்ளார்.
கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி விவரங்கள், பிக்மி இணையதளத்திலேயே 100 சதவீதம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. எனவே, இரண்டு இணையதளத்துக்கும் தொடர்பு கட்டமைப்பு வழங்கும்பட்சத்தில், புதிதாக பதிவு செய்யாமல், தகவல்களைப் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும். இதனால் செவிலியர்களின் பணிசுமை குறையும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.