

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் தொடர் போராட்டத்தில் 3-வது நாளான நேற்று மடியேந்தி நூதன போராட்டத்தில் பொது மக்கள் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள நீர் நிலையில் கட்டப்பட்டுள்ள 67 வீடுகளை, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, வருவாய்த் துறையினர் அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் தொடர் முழக்க போராட்டம் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கியது. 2-வது நாளில் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 3-வது நாளான நேற்று போராட்டம் நடைபெற்றது.
பொதுமக்கள் சாலையில் மண்டியிட்டு மடியேந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் வீடுகளை இடித்து மக்களை நடுத்தெருவில் தள்ளக்கூடாது, மாற்று குடியிருப்பு வழங்காமல் வீடுகளை இடிக்கும் முடிவை வருவாய்த் துறையினர் கைவிட வேண்டும் என்றனர்.