2016-க்கு முன் அங்கீகாரம் பெறாத மனைகளை வரன்முறைப்படுத்த 6 மாதம் அவகாசம் - அமைச்சர் முத்துசாமி தகவல்

2016-க்கு முன் அங்கீகாரம் பெறாத மனைகளை வரன்முறைப்படுத்த 6 மாதம் அவகாசம் - அமைச்சர் முத்துசாமி தகவல்
Updated on
1 min read

சென்னை: கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்டு அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகள், தனி மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் அனுமதியளிக்க 6 மாதம் அவகாசம் வழங்க முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: கட்டுமானப் பொறியாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், 44 கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தனர். அவற்றில் 18 கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று தெரிவித்து விட்டோம். மீதமுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கட்டிடங்கள் கட்ட தற்போது 12 மீட்டர் உயரம் வரை அனுமதியளிக்கப் படுகிறது. இதனை 13, 14 மீட்டராக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கோயில் நகரங்களான மதுரை, திருவண்ணாமலையில், புதிதாக உருவாக்கப்பட்ட பகுதிகளில் இடைவெளி இல்லாத தொடர் கட்டுமானத்துக்கு அனுமதியளிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் சில இடங்களில் மட்டுமே தொடர் கட்டுமான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், தற்போது தமிழகத்தில் பல பகுதிகளில்
இதுபோன்ற தொடர் கட்டுமானங்களுக்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை பொறுத்தவரை, முன்பெல்லாம் அதற்கான சில விதிகளை பின்பற்றி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே அனுமதியளித்தன. ஆனால், கடந்த 2019-ம்
ஆண்டு ஒருங்கிணைந்த கட்டிட விதிகள் தொடர்பான சட்டம் உருவாக்கப்பட்டபோது, உள்ளாட்சி அமைப்புகள் இதுபோன்ற தொடர் கட்டுமானங்களுக்கான அனுமதியளிப்பது நிறுத்தப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, நாகர்கோவிலில் தொடர் கட்டிட அனுமதி குறித்து பேசியிருந்தார். நாகர்கோவில் மட்டுமல்ல; தமிழகம் முழுவதும் பல நகரங்களில் இப்பிரச்சினை 2019-ம் ஆண்டு முதல் உள்ளது.இதனை தீர்க்க தேவையான வழிமுறைகளை திமுக அரசு ஏற்படுத்தும். தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 7 சதவீதத்துக்கு மட்டுமே மாஸ்டர் பிளான்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது இதை 19 சதவீதமாக உயர்த்தவும், அதன்பின் 22 சதவீதமாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 135 மாஸ்டர் பிளான்கள் கொண்டுவர உள்ளோம். கட்டிடம் கட்டும்போது அரசிடம் கண்டிப்பாக அனுமதி பெற்று கட்ட வேண்டும். முன் அனுமதி பெறாமல் யாரும் கட்டிடம் கட்ட வேண்டாம். முன் அனுமதி பெறாமல் நிறைவு சான்றிதழ் பெறமுடியாது. அவ்வாறு கட்டப்படும் கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும்.

கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன்உருவாக்கப்பட்ட மனைப்பிரிவு களில் அங்கீகாரம் பெறாதவற்றுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டப்படி அனுமதி பெற வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த காலஅவகாசம் முடிந்தும், வன்முறைப்படுத்த விண்ணப்பிக் காதவர்கள் உள்ளனர். எனவே, கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன் அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகள், மற்றும் தனி மனைகளை வரன்முறைப்படுத்த 6 மாதம் காலஅவகாசம் கொடுக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in