

கோவில்பட்டி: கழுகுமலை பேரூராட்சி கடந்த 2013-ம் ஆண்டு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டது. இங்குள்ள சமணர் சிற்பங்கள், குடவரை கோயிலான கழுகாசல மூர்த்தி கோயில், மலை மீதுள்ள வெட்டுவான் கோயில் ஆகியவற்றை காண்பதற்காக வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆனால் சுற்றுலாத்தலத்துக்குரிய எந்தவித மேம்பாடுகளும் ஏற்படுத்தப்படாமல் மிகவும் பின் தங்கிய ஊராகவே கழுகுமலை உள்ளது. கழுகுமலையை பொறுத்தவரை இங்குள்ள மக்கள் தீப்பெட்டி மற்றும் விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 2005-ம் ஆண்டு 20 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது.
மகப்பேறு அறுவை சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை அரங்கும் ஏற்படுத்தப்பட்டது. இந்த சுகாதார நிலையத்துக்கு உட்பட்டு 6 துணை சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. கழுகுமலையை சுற்றியுள்ள 24 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற இங்கு தான் வருகின்றனர். இந்த மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 மருத்துவர்கள், 5 செவிலியர்கள், மருந்தாளுநர் உள்ளிட்டோர் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது 1 மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளனர்.
4 செவிலியர்கள் உள்ளனர். மருந்தாளுநர் பணியிடம் காலியாக உள்ளது. செவிலியர்களே மருந்தாளுநர் பணிகளையும் கூடுதலாக கவனித்து வருகின்றனர். மேலும், இரவு நேர மருத்துவரும் கிடையாது. இதனால் பகலில் சிகிச்சை பெற வரும் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் இரா.சிவராமன் கூறுகையில், கழுகுமலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்த ஆலைகள் ஏராளமான கிராம மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகின்றன. தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் நிறைந்த பகுதியாக உள்ளதால் கழுகுமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீக்காய நிபுணர் நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும்.
மேலும், வாரந்தோறும் செவ்வாய்கிழமை மட்டும் மகப்பேறு மருத்துவர் வருகிறார். மற்ற நேரங்களில் முழுவதுமே அவசர தேவைக்கு கர்ப்பிணிகள் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். காலையில் மருத்துவர் தாமதமாக வருவதால் நீரிழிவு நோயாளிகள் சிகிச்சை பெற காத்திருக்கும் நிலையும் உருவாகியுள்ளது.
எனவே, கழுகுமலையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவர், தீக்காய நிபுணர், மகப்பேறு மருத்துவர் ஆகிய பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக அறிவித்து, மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மேலும், காலியாக உள்ள மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் மற்றும் இரவு காவலர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தமிழ்நாடு அருசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.