Published : 31 Aug 2023 08:10 AM
Last Updated : 31 Aug 2023 08:10 AM
தாம்பரம்: வடகிழக்கு பருவமழை தொடங்கினாலே சென்னை புறநகர் பகுதியை ஒட்டியுள்ள வரதராஜபுரம், முடிச்சூர், ஊரப்பாக்கம், ஆதனூர் உள்ளிட்ட பகுதிகள் தான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு ஆண்டு மழையின்போதும் அடையாறில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அடையார் ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு, தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது. முன்னர் பல இடங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அங்கு குடியிருந்த மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதற்கு நிரந்தர தீர்வு காண பொதுப்பணித் துறை மூலம், அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, தமிழக முதல்வர் 3 முறை வரதராஜபுரம் வந்து, பாதிப்புகளை ஆய்வு செய்தார். அப்போது அடுத்த ஆண்டு (2023) இந்த பாதிப்பு இருக்காது, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மக்களிடம் உறுதி அளித்தார். அதன்படி தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் நேரடியாக வந்து ஆய்வு செய்தார்.
இது வரதராஜபுரம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளன. எதிர்வரும் பருவமழைக்காலத்துக்குள் பணிகளை நிறைவேற்ற மக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், மீண்டும் ஒரு பெருவெள்ளத்தை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து வரதராஜபுரம் நல மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வி.ராஜசேகரன் கூறியதாவது: தற்போது அடையாறு ஆற்றில் கரை உடைப்பு ஏற்படும் இடங்களில் தடுப்புச்சுவர்கள் அமைப்பது, தேவைப்படும் இடங்களில் வால்வு ஷட்டர் அமைப்பது, போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
தடுப்புச்சுவர்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. தடுப்புச்சுவர் அமைக்க வாகனங்கள் வந்து செல்வதற்கு ஆற்றின் கரைகள் கரைக்கப்பட்டுள்ளன. மண்சரிந்து கரை உடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால், உடனடியாக அந்த பணிகளை செய்து முடிக்க வேண்டும்.
இதேபோல் ராயப்பா நகர் வழியாக அமைக்கப்பட்டுள்ள மூடுகால்வாய் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை. 400 அடி வெளிவட்டச்சாலையில் மூடுகால்வாய் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. எதிர்வரும் மழைக்காலத்துக்குள் மூடுகால்வாய் பணிகளை முழுமையாக செய்து முடித்தால்தான், ராயப்பா நகர், அஷ்டலட்சுமி நகர், புவனேசுவரி நகர், சாந்தி நிகேதன், குமரன் நகர் உள்ளிட்ட வாதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியும்.
மேலும், அடையாறு ஆற்றின் மேல், 400 அடி வெளிவட்ட சாலையில், ராயப்பா நகரில் பாலம் உள்ளது. இந்த பாலம் அகலம் குறைவாக இருந்ததால், 2015-ம் ஆண்டு பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வரதராஜபுரம் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. எனவே, தற்போது உள்ள பாலத்துக்கு அருகிலேயே மற்றொரு பாலம் கட்ட வேண்டும்.
இதுகுறித்து தமிழக அரசிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும், இதற்கான திட்டம் உள்ளதாகவும் அறிகிறோம். எனவே, உடனடியாக அடையாறு ஆற்றின் மேல், ராயப்பா நகரில் இன்னொரு பாலம் கட்டித்தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நீர்வள ஆதாரத்துறையினர் கூறியதாவது: அடையாறு ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்க ரூ.70 கோடியில் கட்டமைப்புபணிகள் நடைபெற்று வருகின்றன.இதில் கரைகளை பலப்படுத்துதல், தாங்கு சுவர் அமைத்தல், பாதாள மூடு கால்வாய் அமைத்தல் போன்ற பணிகள் நடக்கின்றன.
80 சதவீத பணிகள் நிறைவுபெற்றுள்ளன. ஏற்கெனவே அடையாற்றில், 10 ஆயிரம் கனஅடி நீர்வெளியேற்றும் வகையில் கட்டமைப்புகள் இருந்தன. தற்போது, 70 கோடியில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்ட பின், 15 ஆயிரம் கனஅடி மழைநீர் வெளியேறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் நிறைவு பெறும். இதனால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் ஓரிரு நாட்கள் மட்டுமே தேங்க வாய்ப்புள்ளது. வாரக்கணக்கில் மழை நீர் தேங்குவது தவிர்க்கப்படும். பாதாள மூடு கால்வாய் பணி வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையை கடந்து, அடையார் ஆற்றில் இணைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணியை டிஎன்ஆர்டிசி., நிர்வாகமே செய்வதாக முதலில் உறுதி அளித்தது. பின்னர் தங்களால் செய்ய இயலாது என ௮வர்கள் தெரிவித்ததால், நீர்வள ஆதாரத்துறையே இந்த பணியை மேற்கொள்கிறது. விரைவில் பணிகள் முடிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT