Published : 31 Aug 2023 04:46 PM
Last Updated : 31 Aug 2023 04:46 PM
தென்காசி: தென் மாவட்டங்களில் சாதிய பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருகிறது. சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவர் ஒருவரை வீடு புகுந்து சக மாணவர்களே வெட்டியது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனைவரும் சமம் என்ற எண்ணம் இல்லாதது, பிஞ்சு நெஞ்சங்களிலேயே சாதிய எண்ணத்தை வளர்த்து விடுவது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் கைகளில் சாதியை குறிக்கும் அடையாள கயிறுகளை கட்டிக்கொண்டு வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.
இது சர்ச்சையானதை தொடர்ந்து, மாணவர்கள் தங்கள் கைகளில் கயிறுகளை கட்டக் கூடாது என்று ஆசிரியர்கள் உத்தரவிட்டனர். இதையடுத்து, பள்ளி வளாகத்துக்குள் மாணவர்கள் கயிறு கட்டாமல் வந்தாலும், பள்ளிக்கு வெளியே கைகளில் கயிறு கட்டிக்கொண்டு தங்கள் சாதிய அடையாளத்தை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. மேலும், மாணவர்கள் தங்கள் சைக்கிள்களில் சாதிய அடையாளத்தை குறிக்கும் வண்ணங்களை தீட்டியிருப்பது ஆசிரியர்களுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எப்படி தீர்வு காண்பது என தெரியாமல் திகைக்கின்றனர். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, சாதியத்தின் பிடியில் இருந்து விடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் அந்தந்த பகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கும் சமூகத்தினர் தங்கள் பகுதியில் உள்ள மின் கம்பங்களில் தங்களது சாதியை குறிக்கும் அடையாளங்களை பெயின்ட் மூலம் வரைந்துள்ளனர். மின் கம்பம் அனைவருக்கும் பொதுவானது என்பதை அவர்கள் உணரவில்லை. இதுபோன்ற சாதிய குறியிடுகள் கிராமப்புறங்களுக்கு செல்வோரை பதற்ற நிலையிலேயே வைத்திருக்கிறது.
போதிய ஊழியர்கள் இல்லை: இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, “தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே கிராமப்புறங்களில் மின் கம்பங்களில் சாதிய அடையாளங்களை காட்டும் வகையில் சாதி கட்சி கொடிகளை வரைந்துள்ளனர். இதை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் இதை செய்வதற்கு போதிய ஊழியர்கள் இல்லை.
சில பகுதிகளில் சாதிய அடையாளங்களை அழித்தாலும் மீண்டும் பெயின்ட் மூலம் வரைந்துவிடுகின்றனர். அதை அகற்றுவதற்கு மின்வாரிய ஊழியர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ளவர்களே இதுபோன்ற குறியீடுகளை மின் கம்பங்களில் வரைகின்றனர். மின்துறை, வருவாய்த்துறை, காவல்துறை இணைந்து நடவடிக்கை எடுத்தால்தான் இது போன்ற குறியீடுகளை அகற்றுவது சாத்தியமாகும்.
சாதிய அடையாளங்களை மின் கம்பங்களில் வரைபவர்கள் யார் என்பதை காவல்துறை மூலம் கண்டறிவது எளிது. எனவே, அவர்களை கண்டறிந்து காவல்துறை, மின்வாரியம், வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை எடுத்தால் இதற்கு தீர்வு காணலாம். மேலும், கிராமப் புறங்களில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியமாகிறது. அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சி தொண்டர்களிடம் பொது சொத்துகளில் கொடிகளை வரைவதைத் தடுக்க வலியுறுத்த வேண்டும். தொண்டர்களை நல்வழிப்படுத்த வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT