

கோவை: நீட் விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக தமிழக ஆளுநரை குறைகூறுகின்றனர் என, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணன் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வை பொறுத்தவரை எதற்காக சாலையில் இறங்கி போராடுகின்றனர். உச்ச நீதிமன்றத்தை அணுகி, நாங்கள் முறையாக செய்துள்ளோம், ஆளுநர் முறையாக கடைபிடிக்க வில்லை என்று சொல்லலாம். அதை விடுத்து இதை அரசியலாக்க வேண்டும் என்பதற்காக ஆளுநரை அரசியலுக்குள் இழுப்பது தான் தமிழக அரசின் போக்காக உள்ளது.
எதிர்க்கட்சிகள் அணுகு முறை என்பது அப்படித் தான் இருக்கும். நான் ஆளுநராக உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் நீட் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தெரிந்தோ, தெரியாமலோ, அல்லது வேண்டுமென்றே கூட செய்ய முடியாததை செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆளுநரை குறை சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். ஏழை மக்களின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்திருப்பது எல்லோராலும் வரவேற்கப்படுகிறது.
பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் எல்லோரும் வரவேற்பார்கள். சுங்க கட்டணம் உயர்வதை மட்டும் பார்க்கக் கூடாது. சுங்க கட்டணம் உயர்வுக்கு பின்னர் எத்தனை புதிய நான்கு வழிச்சாலைகள் வந்துள்ளது என்று பார்க்க வேண்டும். முன்பு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு எவ்வளவு மணி நேரமானது, தற்போது எவ்வளவு நேரமாகிறது என்று பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.