

திருப்பூர்: காங்கயம் அருகே நெய்க்காரன் பாளையம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு சலவைத் தொழிலாளி சிவா (60) என்பவருக்கு, அந்த ஊர் மக்கள் ஆதரவின் பேரில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.
கடந்த 4 மாதங்களாக அவரை அங்கு குடியிருக்க வேண்டாம் என ஊர் மக்கள் தரப்பில் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அவர் வீட்டை விட்டு வெளியேற மறுத்த நிலையில், கடந்த 8-ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் வீட்டை சேதப்படுத்தினர். புகாரின் பேரில் 10 பேரை காங்கயம் போலீஸார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
சேதப்படுத்தப்பட்ட சிவாவின் வீட்டை திருப்பூர் மக்களவைத்தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன் நேரில் பார்வையிட்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘ஒவ்வொரு குடிமகனையும் ஜாதியின் பெயரால், ஏற்றத் தாழ்வுகளின் பெயரால் ஒடுக்க முற்படுவது சட்ட விரோதமானது. இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிவாவுக்கு நியாயம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.